Lakshmi Mammal Memorial trophy was seized by Sekhandabad South Central Railway
அகில இந்திய வலைகோல் பந்தாட்டப் போட்டியில் செகந்திராபாத் தெற்கு மத்திய ரயில்வே அணி சாம்பியன் வென்று இலட்சுமியம்மாள் நினைவுக் கோப்பையை கைப்பற்றியது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கிருஷ்ணாநகர் செயற்கை இழை ஹாக்கி மைதானத்தில் கடந்த 5-ஆம் தேதி முதல் இலட்சுமியம்மாள் நினைவுக் கோப்பைக்கான அகில இந்திய வலைகோல் பந்தாட்டப் போட்டி நடைபெற்று வந்தது.
இதன் இறுதியாட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், செகந்திராபாத் தெற்கு மத்திய ரயில்வே அணியும், புது டெல்லி ஓ.என்.ஜி.சி. அணியும் மோதின.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் நிமிடத்திலேயே புது டெல்லி வீரர் விகாஸ் டோப்போ கோலடித்தார்.
இதையடுத்து 9-வது நிமிடத்தில் செகந்திராபாத் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைக்க, அதில் ககன்தீப் சிங் கோலடித்தார்.
இதனால் முதல் பாதி ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தன.
பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தின் 55-வது நிமிடத்தில் புது டெல்லியின் சுமித்குமார் கோலடிக்க, அதற்குப் பதிலடியாக 61-வது நிமிடத்தில் செகந்திராபாத் வீரர் மணிகண்ட வெங்கடேஷ்வரன் கோலடித்தார்.
ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தன. இதையடுத்து வெற்றியைத் தீர்மானிக்க, பெனால்டி சூட் அவுட் முறை கடைப்பிடிக்கப்பட்டது.
அதில், செகந்திராபாத் அணி 4-3 என்ற கோல் கணக்கில் புது டெல்லி ஓ.என்.ஜி.சி. அணியை வீழ்த்தி சாம்பியன் வென்றது.
பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு கே.ஆர். கல்வி நிறுவனங்களின் தலைவர் கே. ராமசாமி தலைமை தாங்கினார்.
இந்தப் போட்டிகளில் வென்ற அணிகளுக்கு தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ. ராஜு, ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் ராஜலட்சுமி, தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் ஆகியோர் சுழற்கோப்பை மற்றும் ரொக்கப் பரிசுகளை வழங்கினர்.
சாம்பியன் பட்டம் வென்ற செகந்திராபாத் தெற்கு மத்திய ரயில்வே அணிக்கு இலட்சுமியம்மாள் நினைவு சுழற்கோப்பையுடன் ரூ.1 இலட்சமும், 2-வது இடம்பிடித்த புது டெல்லி ஓ.என்.ஜி.சி. அணிக்கு சுழற்கோப்பையுடன் ரூ.75 ஆயிரமும், 3-வது இடம்பிடித்த கபூர்தலா ஆர்.சி.எப். அணிக்கு சுழற்கோப்பையுடன் ரூ.50 ஆயிரமும், 4-வது இடம்பிடித்த பெங்களூரு ராணுவ லெவன் அணிக்கு சுழற்கோப்பையுடன் ரூ.30 ஆயிரமும் வழங்கப்பட்டன.
விழாவில், தலைமை விருந்தினராக முன்னாள் ஹாக்கி கேப்டனும், அர்ஜுனா விருது பெற்றவருமான திலீப் திர்கே, சிறப்பு விருந்தினராக இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் முகமது ரியாஸ் ஆகியோர் பங்கேற்றனர்.
