நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் புதிய மைல்கல் ஒன்றை எட்டியுள்ளார் குல்தீப் யாதவ்.

உலக கோப்பை நெருங்கிவிட்ட நிலையில், இந்திய அணி வலுவாக உள்ளது. பொதுவாகவே பேட்டிங் அணியாக அறியப்பட்ட இந்திய அணி, பும்ரா, குல்தீப், சாஹல் ஆகியோரின் வருகையால் தற்போது மிகச்சிறந்த பவுலிங் அணியாகவும் திகழ்கிறது. 

அஷ்வின் - ஜடேஜா சுழல் ஜோடியின் இடத்தை பூர்த்தி செய்துள்ள குல்தீப் - சாஹல் சுழல் ஜோடி சர்வதேச அளவில் அனைத்து அணிகளுக்கும் சவாலாக திகழ்ந்துள்ளது. தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் அசத்திய இந்த ஜோடி, நியூசிலாந்திலும் அருமையாக வீசிவருகிறது. 

குல்தீப் மற்றும் சாஹல் ஆகிய இருவருமே சிறப்பாக வீசினாலும் இருவரில் குல்தீப் யாதவின் பவிலிங் அபாரமானது. அவரது பந்தையும் கையசைவுகளையும் பேட்ஸ்மேன்களால் கணிக்க முடியாதது அவரது மிகப்பெரிய பலம். 

நியூசிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் 39 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்திய குல்தீப் யாதவ், இரண்டாவது போட்டியில் 45 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இரண்டு போட்டிகளிலும் சேர்த்து 8 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார் குல்தீப். இந்த இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றதற்கு குல்தீப் யாதவின் பவிலிங் மிக முக்கியமான காரணம்.

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் புதிய மைல்கல் ஒன்றை எட்டியுள்ளார் குல்தீப் யாதவ். அதாவது முதல் 37 சர்வதேச போட்டிகளில் ஆடிய பின்னர், அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர்களின் பட்டியலில் பாகிஸ்தானின் சாக்லைன் முஷ்டாக் மற்றும் ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் ஆகியோரை பின்னுக்கு தள்ளி இரண்டாமிடத்தை பிடித்துள்ளார் குல்தீப் யாதவ். முதலிடத்தில் ரஷீத் கான் இருக்கிறார். 

முதல் 37 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் ஆடிய பின்னர், அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர்களில் 86 விக்கெட்டுகளுடன் ஆஃப்கானிஸ்தான் ஆல்ரவுண்டர் ரஷீத் கான் முதலிடத்தில் உள்ளார். 77 விக்கெட்டுகளுடன் குல்தீப் யாதவ் இரண்டாமிடத்தில் உள்ளார். 73 விக்கெட்டுகளை வீழ்த்திய சாக்லைன் முஷ்டாக் மற்றும் மிட்செல் ஸ்டார்க் ஆகிய இருவரும் மூன்றாமிடத்தில் உள்ளனர்.