ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் அபாரமாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார் குருணல் பாண்டியா.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டி20 போட்டி சிட்னி நகரில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் ஃபின்ச் பேட்டிங் தேர்வு செய்தார். தொடக்க வீரர்கள் ஆரோன் பின்ச் மற்றும் ஷார்ட் ஆகிய இருவரும் சிறப்பாக தொடங்கினர். 

முதல் விக்கெட்டுக்கு 68 ரன்கள் சேர்த்தனர். இந்த தொடக்க ஜோடியை குல்தீப் யாதவ் பிரித்தார். ஃபின்ச்சை 28 ரன்களில் வெளியேற்றினார். அதற்கு அடுத்த ஓவரிலேயே குருணல் பாண்டியா, ஷார்ட் மற்றும் மெக்டோர்மெட்டை அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தி வெளியேற்றினார்.

அதன்பிறகு சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன. மேக்ஸ்வெல்லின் விக்கெட்டை இந்த முறையும் குருணல் பாண்டியா வீழ்த்தினார். மேக்ஸ்வெல்லை தொடர்ந்து நன்றாக ஆடிக்கொண்டிருந்த அலெக்ஸ் கேரியை வீழ்த்தினார் குருணல் பாண்டியா.

கடைசி நேரத்தில் மார்கஸ் ஸ்டோய்னிஸ் அதிரடியாக ஆடி 15 பந்துகளில் 25 ரன்கள் அடித்தார். 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்களை குவித்தது ஆஸ்திரேலிய அணி. இந்திய அணியின் சார்பில் குருணல் பாண்டியா 4 விக்கெட்டுகளையும் குல்தீப் யாதவ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இந்திய அணி இலக்கை விரட்டிவருகிறது.