முதல் டி20 போட்டியில் தனது பவுலிங்கில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் விளாசி மிரட்டிய மேக்ஸ்வெல்லை கிளீன் போல்டாக்கி பழிதீர்த்தார் குருணல் பாண்டியா. 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோற்றது. இதையடுத்து நேற்று மெல்போர்னில் இரண்டாவது டி20 போட்டி நடந்தது. இந்த போட்டியிலும் மழை குறுக்கிட்டதோடு, நீண்டநேரம் மழை நிற்காததால் போட்டி கைவிடப்பட்டது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 19 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்த நிலையில் மழை வந்தது. அதன்பிறகு விட்டுவிட்டு மழை வந்து கொண்டேயிருந்ததால் முடிவின்றி போட்டி கைவிடப்பட்டது.

இந்த போட்டி இந்திய அணி வென்றிருக்க வேண்டிய போட்டி. இந்திய பவுலர்கள் அபாரமாக பந்துவீசி ஆஸ்திரேலிய அணியை சுருட்டினர். எனினும் மழையால் இந்திய அணியின் வெற்றி பாதிக்கப்பட்டது. 

இந்த போட்டியில் தனது பவுலிங்கை முதல் போட்டியில் அடித்து நொறுக்கிய மேக்ஸ்வெல்லை வீழ்த்தி பழிதீர்த்தார் குருணல் பாண்டியா. முதல் போட்டியில் குருணல் பாண்டியா, 4 ஓவர்களை வீசி 55 ரன்களை விட்டுக்கொடுத்திருந்தார். இதற்கு முக்கிய காரணம் மேக்ஸ்வெல்தான். முதல் போட்டியில் குருணல் வீசிய 14வது ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் விளாசியதோடு, 16வது ஓவரிலும் ஒரு சிக்ஸர் விளாசினார். குருணல் பாண்டியாவின் பவுலிங்கை வெளுத்துவாங்கிவிட்டார். 

இந்நிலையில், நேற்று நடந்த இரண்டாவது போட்டியிலும் குருணலின் பந்துகளை அடிக்க முயன்றார். ஆனால் இம்முறை மேக்ஸ்வெல்லின் பாச்சா பலிக்கவில்லை. வெறும் 19 ரன்னில் மேக்ஸ்வெல்லை கிளீன் போல்டாக்கி வெளியேற்றினார் குருணல் பாண்டியா. மேக்ஸ்வெல்லின் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியை ஆக்ரோஷமாக கொண்டாடினார் குருணல்.