கடந்த முறை இறுதிச்சுற்று வரை முன்னேறியவரான போர்னா கோரிச், இந்த முறை சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் அதிர்ச்சித் தோல்விக் கண்டார்.

போட்டித் தரவரிசையில் 6-ஆவது இடத்தில் இருந்த போர்னா கோரிச், தனது முதல் சுற்றில் 3-6, 5-7 என்ற நேர் செட்களில் தகுதிச்சுற்று வீரரான தென் கொரியாவின் ஹியோன் சுங்கிடம் அதிர்ச்சித் தோல்வி கண்டார்.

22-ஆவது சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய (எஸ்டிஏடி) மைதானத்தில் திங்கள்கிழமை தொடங்கியது.

பிரதான கோர்ட்டில் நடைபெற்ற 2-ஆவது ஆட்டத்தில் போர்னா கோரிச்சும், ஹியோன் சுங்கும் மோதினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் செட்டின் முதல் கேமிலேயே தனது சர்வீஸை இழந்த கோரிச், அடுத்த கேமில் சுங்கின் சர்வீஸை முறியடித்து சரிவிலிருந்து மீண்டார்.

இதன்பிறகு 4-ஆவது கேமில் சுங்கின் சர்வீஸை முறியடிக்க கோரிச் கடுமையாகப் போராடினார். ஆனால் விடாப்பிடியாக போராடிய சுங், கோரிச்சின் முயற்சியை முறியடித்தார்.

அடுத்த கேமில் கோரிச்சின் சர்வீஸை முறியடித்து அதிர்ச்சியளித்த சுங், 9-ஆவது கேமில் நீண்ட போராட்டத்துக்குப் பிறகு 3-ஆவது முறையாக கோரிச்சின் சர்வீஸை முறியடிக்க, முதல் செட் 6-3 என்ற கணக்கில் அவர் வசமானது.

பின்னர் நடைபெற்ற 2-ஆவது செட்டில் இருவரும் அபாரமாக ஆடினர். இதனால் 2-ஆவது கேமில் கோரிச் தனது சர்வீஸை தக்கவைக்க கடுமையாகப் போராட வேண்டிய நிலை ஏற்பட்டது. இதன்பிறகு 11-ஆவது கேம் வரை இருவரும் அபாரமாக ஆட, இந்த செட் டைபிரேக்கருக்கு செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் 12-ஆவது கேமில் அபாரமாக ஆடிய சுங், அதில் கோரிச்சின் சர்வீஸை முறியடிக்க, அந்த செட் 7-5 என்ற கணக்கில் அவர் வசமானது. இதனால் கோரிச் அதிர்ச்சித் தோல்வி கண்டார். சுங் தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் டூடி செலாவை சந்திக்கிறார்.