கௌகாத்தி,

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் வெள்ளிக்கிழமை ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் கொல்கத்தா அணி 2–1 என்ற கோல் கணக்கில் கௌகாத்தியை வீழ்த்தியது.

எட்டு அணிகள் பங்கேற்றுள்ள மூன்றாவது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதியை எட்டும். இந்த நிலையில் கௌகாத்தியில் வெள்ளிக்கிழமை இரவு நடந்த 25–வது லீக்கில் நார்த் ஈஸ்ட் யுனைனெட் (கௌகாத்தி) – அட்லெடிகோ டீ கொல்கத்தா அணிகள் சந்தித்தன. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 39–வது நிமிடத்தில் கௌகாத்தி வீரர் அல்பரோவும், 63–வது நிமிடத்தில் கொல்கத்தா வீரர் போஸ்டிகாவும் கோல் அடித்தனர்.

ஆட்டம் டிராவை நோக்கி நகர்ந்த நிலையில் 82–வது நிமிடத்தில் கொல்கத்தா வீரர் ஜூவான் பெலென்கோசோ திருப்பம் தந்தார். இடது பக்கத்தில் இருந்து லால்ரிந்திகா ரால்ட் அடித்த ஷாட்டை, கௌகாத்தி கோல் கீப்பர் சுப்ரதா பால் பாய்ந்து விழுந்து தடுக்க முயற்சித்தார். பந்து அவரிடம் சிக்கவில்லை. அந்த சமயம் அங்கு ஓடி வந்த பெலென்கோசா அதே வேகத்தில் பந்தை கோலுக்குள் திருப்பி அசத்தினார். முடிவில் கொல்கத்தா அணி 2–1 என்ற கோல் கணக்கில் கௌகாத்தியை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் புள்ளி பட்டியலில் கொல்கத்தா அணி 12 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

சென்னை நேரு ஸ்டேடியத்தில் சனிக்கிழமை இரவு 7 மணிக்கு அரங்கேறும் லீக்கில் சென்னையின் எப்.சி.– கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதுகின்றன. ஐ.எஸ்.எல். வரலாற்றில் இவ்விரு அணிகளும் இதுவரை 6 ஆட்டங்களில் நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. அதில் 4–ல் சென்னை அணியும், ஒன்றில் கேரளாவும் வெற்றி கண்டுள்ளன. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை.

சென்னையின் எப்.சி. பயிற்சியாளர் மார்கோ மெட்டராசி கூறுகையில், ‘உள்ளூரில் அடுத்தடுத்து இரண்டு ஆட்டங்களில் விளையாட உள்ளோம். இந்த இரு ஆட்டங்களும் எங்களுக்கு மிகவும் முக்கியமானவை. இந்த தொடரை பொறுத்தவரை ஒரு வெற்றியை பெறுவதே கடினமாக இருக்கிறது. அதுவும் தொடர்ந்து இரண்டு ஆட்டங்களில் வெற்றி காண்பது என்றால் இன்னும் கடினம். இருப்பினும் அதற்காக நாங்கள் கடினமாக உழைத்து வருகிறோம்’ என்றார். போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்2, விஜய் சூப்பர் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.