கொல்கத்தா நைடர்ஸ் அணி ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கை விடுவித்துள்ளது. 

கடந்த 2008ம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஐபிஎல் தொடரில் இதுவரை 11 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளன. 12வது சீசன் அடுத்த ஆண்டு நடக்க உள்ளது. அடுத்த ஆண்டு மே மாத இறுதியில் உலக கோப்பை தொடங்க இருப்பதால், ஐபிஎல் சீசன் வழக்கத்தைவிட முன்னதாகவே தொடங்கப்பட உள்ளது. அதனால் வழக்கமாக ஜனவரி அல்லது பிப்ரவரி மாதம் நடக்கும் வீரர்கள் ஏலம் இம்முறை டிசம்பர் மாதம் கோவாவில் நடக்க உள்ளது. 

அதனால் அதற்கு முன்னதாக அனைத்து அணிகளும் தாங்கள் தக்கவைக்க விரும்பாத வீரர்களின் பட்டியலை சமர்ப்பிக்குமாறு கேட்டிருந்தது. அதன்படி அனைத்து அணிகளும் தாங்கள் தக்கவைத்து கொள்ள விரும்பாத வீரர்களை விடுவித்துள்ளன. 

பெங்களூரு அணி முன்னதாகவே குயிண்டன் டி காக்கை விடுவித்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மார்க் உட், கனிஷ்க் சேத், ஹிதிஸ் சர்மா ஆகிய மூவரையும் விடுவித்துள்ளது. 

இந்நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கடந்த சீசனில் ரூ.9.4 கோடிக்கு ஏலத்தில் எடுத்த ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கை விடுவித்துள்ளது. ஐபிஎல் தொடரின் வெற்றிகரமான அணிகளில் ஒன்றாக திகழும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, இதுவரை இரண்டு முறை கோப்பையை வென்றுள்ளது. அந்த அணிக்கு இரண்டு முறை கோப்பையை வென்றுகொடுத்த காம்பீரை கடந்த சீசனில் விடுவித்துவிட்டு தினேஷ் கார்த்திக்கை ஏலத்தில் எடுத்து அவரை கேப்டனாக நியமித்தது. 

தினேஷ் கார்த்திக்கின் தலைமையில் அந்த அணி சிறப்பாகவே ஆடியது. அந்த அணி பெரிதும் நம்பி, அதிகமான தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட மிட்செல் ஸ்டார்க், காயம் காரணமாக கடந்த தொடரிலிருந்து முழுவதுமாக விலகினார். இதனால் அந்த அணி ஏமாற்றமடைந்தது. இந்நிலையில், அடுத்த சீசனுக்கான ஏலத்திற்கு முன்னதாக மிட்செல் ஸ்டார்க்கை விடுவித்துள்ளது கொல்கத்தா அணி. 

மிட்செல் ஸ்டார்க்கை விடுவித்தது குறித்து அவருக்கு டெக்ஸ்ட் மெசேஜ் மூலம் அத்தகவலை தெரியப்படுத்தியுள்ளது கொல்கத்தா அணி.