ஐபிஎல் 11வது சீசனின் மூன்றாவது போட்டியில் கோலி தலைமையிலான பெங்களூரு அணியை சுனில் நரைனின் அதிரடி ஆட்டத்தால் கொல்கத்தா அணி எளிதில் வீழ்த்தியது.

நேற்று நடந்த முதல் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வென்றது. இதையடுத்து இரவு 8 மணிக்கு கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள் மோதின.

தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியும் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும் களம் கண்டன. டாஸ் வென்ற தினேஷ், முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி, 20 ஓவரின் முடிவில் 176 ரன்கள் எடுத்தது.

177 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணியின் தொடக்க வீரர் சுனில் நரைன், பெங்களூரு அணியின் பந்துவீச்சை பறக்கவிட்டார். மற்றொரு தொடக்க வீரர் கிறிஸ் லின், 5 ரன்களில் வெளியேற, விக்கெட்டை எல்லாம் பொருட்படுத்தாத நரைன், தொடர்ந்து அதிரடியாக ஆடினார்.

5 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் வெறும் 17 பந்துகளில் அரைசதம் அடித்தார். ஆனால், அரைசதம் அடித்த மாத்திரத்திலேயே அவுட்டாகி வெளியேறினார். அதன்பிறகு வெற்றிக்கு தேவையான ரன்விகிதம் குறைந்ததால், கொல்கத்தா அணிக்கு அழுத்தம் குறைந்தது. மிகவும் எளிதாக 19வது ஓவரின் 5வது பந்திலேயே கொல்கத்தா அணி இலக்கை எட்டி வெற்றி பெற்றது. 

முதல் போட்டியிலேயே கொல்கத்தா அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்து தானும் சிறந்த கேப்டன் தான் என்பதை நிரூபித்த தினேஷ் கார்த்திக், அவர் மீது கொல்கத்தா அணி நிர்வாகம் வைத்த நம்பிக்கையையும் காப்பாற்றியுள்ளார்.