இங்கிலாந்திற்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலி அறிவிக்கப்பட்டார்.

இரு போட்டிகளுக்குமான அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக தோனி அறிவித்ததை அடுத்து, ஏற்கெனவே டெஸ்ட் கேப்டனாக தொடரும் கோலி, தற்போது அனைத்து ஆட்டங்களுக்கான இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார்.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மூன்று ஒருநாள் போட்டி, மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளன.

இதில் ஒருநாள் போட்டிகள் வரும் 15-ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அதற்கான இந்திய அணி வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது.

இதில் யுவராஜ் சிங், ஆஷிஷ் நெஹ்ரா போன்ற மூத்த வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டு உள்ளது.

யுவராஜ், ரஞ்சி கோப்பை போட்டியில் 5 ஆட்டங்களில் 672 ஓட்டங்கள் விளாசிய நிலையில் அணிக்கு மீண்டு வந்துள்ளார்.

ஐபிஎல் போட்டியில் காயம் கண்ட நெஹ்ரா, அறுவைச் சிகிச்சைக்குப் பின்பான ஓய்வுக்குப் பிறகு தற்போது களம் காண்கிறார்.

கீப்பிங்கில் தோனிக்கான மாற்று வீரரை தயார்படுத்தும் முயற்சியாக இளம் வீரர் ரிஷப் பந்த் டி-20 அணிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஒருநாள் போட்டியில் அவருக்குப் பதிலாக தேர்வாகியுள்ள ரஹானே, டி-20 போட்டியில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை.

ஷிகர் தவன் ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாட, மறுபக்கம் சுரேஷ் ரெய்னா டி20 போட்டியில் மட்டும் களம் காண்கிறார்.

டி20 போட்டியில் தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவராக கே.எல்.ராகுலுடன் மன்தீப் சிங் களம் காணலாம் எனத் தெரிகிறது. மணீஷ் பாண்டே இரு அணிகளிலும் இடம்பெற்றுள்ளார்.

பந்துவீச்சாளர்களில் அஸ்வின், ஜடேஜா, ஹர்திக் பாண்டியா, பூம்ரா, புவனேஷ்வர் குமார் ஆகியோர் இரு அணிகளிலும் இடம்பெற்றுள்ளனர்.

உமேஷ் யாதவ், அமித் மிஸ்ரா ஒருநாள் அணியிலும், டி20 அணியில் அவர்களுக்கு பதிலாக ஆஷிஷ் நெஹ்ரா, யுவேந்திர சாஹலும் உள்ளனர்.

இங்கிலாந்தின் சாம்பியன்ஸ் டிராபி போட்டி நடைபெறவுள்ள நிலையில், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான அணியில் முக்கிய வீரர்கள் அனைவரும் சேர்த்துக் கொள்ளப்பட்டு உள்ளனர்.

அணியின் விவரம்

ஒருநாள் போட்டி:

கோலி (கேப்டன்), தோனி (விக்கெட் கீப்பர்), கே.எல்.ராகுல், ஷிகர் தவன், மணீஷ் பாண்டே, கேதர் ஜாதவ், யுவராஜ் சிங், அஜிங்க்ய ரஹானே, ஹர்திக் பாண்டியா, அஸ்வின், ஜடேஜா, அமித் மிஸ்ரா, ஜஸ்பிரீத் பூம்ரா, புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ்.

டி20:

கோலி (கேப்டன்), தோனி (விக்கெட் கீப்பர்), மன்தீப் சிங், கே.எல்.ராகுல், யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, அஸ்வின், ஜடேஜா, யுவேந்திர சாஹல், மணீஷ் பாண்டே, ஜஸ்பிரீத் பூம்ரா, புவனேஷ்வர் குமார், நெஹ்ரா.