வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இரட்டைச்சதம் அடித்ததன் மூலம் தொடர்ச்சியாக 4 டெஸ்ட் தொடர்களில் இரட்டைச் சதமடித்த முதல் வீரர் என்ற பெருமையை கோலி பெற்றுள்ளார்.
வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 166 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 687 ஓட்டங்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
வங்கதேசம் – இந்தியா அணிகள் இடையிலான ஒரேயொரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹைதராபாதில் நடைபெற்று வருகிறது.
இதில், டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணியில் முரளி விஜய் 108, புஜாரா 83 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டமிழக்க, முதல் நாள் ஆட்டநேர முடிவில் 90 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 356 ஓட்டங்கள் குவித்திருந்தது.
கேப்டன் கோலி 111, அஜிங்க்ய ரஹானே 45 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தனர்.
இரண்டாவது நாளான வெள்ளிக்கிழமை தொடர்ந்து ஆடிய இந்திய அணியில் அஜிங்க்ய ரஹானே 73 பந்துகளில் அரை சதமடிக்க, விராட் கோலி 170 பந்துகளில் 150 ஓட்டங்களை எட்டினார்.
இந்திய அணி 113.3 ஓவர்களில் 456 ஓட்டங்களை எட்டியபோது ரஹானேவின் விக்கெட்டை இழந்தது. அவர் 133 பந்துகளில் 11 பவுண்டரிகளுடன் 82 ஓட்டங்கள் எடுத்தார்.
ரஹானே - கோலி ஜோடி 4-ஆவது விக்கெட்டுக்கு 50.1 ஓவர்களில் 222 ஓட்டங்கள் குவித்தது. இதையடுத்து கேப்டன் கோலியுடன் இணைந்தார் விக்கெட் கீப்பர் ரித்திமான் சாஹா. இந்த ஜோடியும் சிறப்பாக ஆட, மதிய உணவு இடைவேளையின்போது 121 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 477 ஓட்டங்கள் எடுத்திருந்தது இந்தியா.
மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு தொடர்ந்து சிறப்பாக ஆடிய விராட் கோலி 239 பந்துகளில் இரட்டைச் சதமடித்தார். இது டெஸ்ட் போட்டியில் அவர் அடித்த 4-ஆவது இரட்டைச் சதமாகும்.
இந்தியா 495 ஓட்டங்களை எட்டியபோது கோலி ஆட்டமிழந்தார். 246 பந்துகளைச் சந்தித்த அவர், 24 பவுண்டரிகளுடன் 204 ஓட்டங்கள் குவித்து தைஜுல் இஸ்லாம் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.
முன்னதாக கோலி 180 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது மெஹதி பந்துவீச்சில் எல்பிடபிள்யூ கொடுத்தார் நடுவர். ஆனால் அதை எதிர்த்து டிஆர்எஸ் மூலம் மூன்றாவது நடுவரை அணுகினார் கோலி. அதில் அவர் அவுட் இல்லை என்பது உறுதியானதைத் தொடர்ந்து சிறப்பாக ஆடி இரட்டைச் சதமடித்து அசத்தினார்.
இதையடுத்து வந்த அஸ்வின் 45 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 34 ஓட்டங்கள் சேர்த்து வெளியேற, ஜடேஜா களம்புகுந்தார். இதனிடையே சாஹா 86 பந்துகளில் அரை சதமடித்தார்.
சாஹா ஒருபுறம் சிறப்பாக ஆட, மறுமுனையில் ரவீந்திர ஜடேஜா அதிரடியில் இறங்கினார். அவ்வப்போது பவுண்டரியை பறக்கவிட்ட ஜடேஜா, தைஜுல் பந்துவீச்சில் பிரமாண்ட சிக்ஸரை விளாசி ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். அவர் 40 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது கொடுத்த கேட்ச்சை வங்கதேச வீரர் தமிம் கோட்டைவிட்டார்.
வங்கதேசத்துக்கு எதிராக இரட்டைச் சதமடித்ததன் மூலம் தொடர்ச்சியாக 4 டெஸ்ட் தொடர்களில் இரட்டைச் சதமடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் விராட் கோலி.
முன்னதாக டான் பிராட்மேன், ராகுல் திராவிட் ஆகியோர் தொடர்ச்சியாக 3 தொடர்களில் இரட்டைச் சதமடித்ததே சாதனையாக இருந்தது. அதை இப்போது கோலி முறியடித்துள்ளார்.
