kohli says sorry to rcb fans
இந்த ஐபிஎல் சீசனில் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்றாற்போல் ஆர்சிபி அணி ஆடாததற்காக அந்த அணியின் கேப்டன் கோலி, ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
இதுவரை ஒருமுறை கூடாத ஐபிஎல் கோப்பையை வென்றிராத பெங்களூரு அணி, இந்த முறையாவது கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்கியது. கோலி, டிவில்லியர்ஸ், மெக்கல்லம், பார்த்திவ் படேல் ஆகிய அனுபவ வீரர்களை பெற்றிருந்தும் அந்த அணி இந்த முறையும் கோப்பையை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டது. 12 புள்ளிகளை மட்டுமே பெற்று புள்ளி பட்டியலில் 6வது இடத்தை பிடித்த பெங்களூரு, பிளே ஆஃபிற்கு தகுதி பெறவில்லை.
கோலி தலைமையிலான பெங்களூரு அணி இந்த முறையும் ஏமாற்றமடைந்தது. அதனால் ஆர்சிபி ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
ஆர்சிபி அணிக்கு இந்த சீசனும் சிறப்பாக அமையவில்லை. இந்நிலையில், இந்த சீசனில் ரசிகர்களை ஏமாற்றியதற்காக மன்னிப்பு கேட்டு அந்த அணியின் கேப்டன் கோலி வீடியோ வெளியிட்டுள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், நாங்கள் நினைத்த அளவுக்கு இந்த சீசனை சிறப்பாக விளையாடமுடியவில்லை. இந்த சீசனை நினைத்து நாங்கள் பெருமைப்படவில்லை. நாங்கள் ஆடிய விதம் என்னை மிகவும் வேதனைப்படுத்தியது. ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப எங்களால் ஆடமுடியாததை நினைத்து கவலைப்படுகிறேன். ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அடுத்த சீசனில் அனைத்தும் மாற வேண்டும் என விரும்புகிறேன். அடுத்த ஆண்டு, ஐபிஎல் சீசனில் இன்னும் கூடுதல் முயற்சிகளோடு, அதிகமான பலத்தோடு நாங்கள் களமிறங்கி விளையாடுவோம் என கோலி தெரிவித்துள்ளார்.
இந்த சீசன் பெங்களூரு அணி வெற்றிகரமாக அமையாவிட்டாலும், வழக்கம்போலவே கோலி சிறப்பாகவே ஆடியுள்ளார். இந்த சீசனில் அதிக ரன்கள் வீரர்கள் பட்டியலில் 548 ரன்களுடன் கோலி 6வது இடத்தில் உள்ளார்.
