kohli records in each match
ஒவ்வொரு போட்டியிலும் இந்திய அணியின் கேப்டன் கோலி சாதனைகளைக் குவித்து வருகிறார்
இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என இந்திய அணி முன்னிலையில் உள்ளது. மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டெல்லி ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் இன்று தொடங்கியது.
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. ஷிகர் தவான் மற்றும் புஜாரா ஆகியோர் தலா 23 ரன்களில் வெளியேறினர். சிறப்பாக ஆடிய முரளி விஜய், கோலி ஆகிய இருவரும் சதமடித்து அசத்தினர். முரளி விஜய், 155 ரன்களில் வெளியேறினார்.
முதல் நாளான இன்றைய ஆட்ட நேர முடிவில், 4 விக்கெட்டுகளை இழந்து 371 ரன்களை இந்திய அணி குவித்துள்ளது. கோலி, 156 ரன்களுடனும் ரோஹித், 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இந்த போட்டியில் கேப்டன் கோலி சாதனைகளை குவித்துள்ளார்.
இன்றைய ஆட்டத்தில் டெஸ்ட் போட்டியில் 5000 ரன்களைக் கடந்தார் கோலி. இதன்மூலம், டெஸ்ட் போட்டிகளில் விரைவாக 5000 ரன்களை கடந்த 4வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார்.
சுனில் கவாஸ்கர் 95 போட்டிகளில் 5000 ரன்களை கடந்து பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். அதிரடி வீரர் சேவாக் 98 போட்டிகளிலும், மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர், 103 போட்டிகளிலும் 5000 ரன்களை எட்டியுள்ளனர். தற்போது விராட் கோஹ்லி 105வது போட்டியில் 5000 ரன்களை கடந்துள்ளார்.
அடுத்ததாக, மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட அனைத்து டெஸ்ட் தொடரிலும் சதமடித்த கேப்டன் என்ற சாதனையை கோலி படைத்துள்ளார்.
கேப்டனாக டெஸ்ட் போட்டியில் 3000 ரன்களை விளாசிய சாதனையையும் கோலி படைத்துள்ளார். முன்னதாக தோனி (3454 ரன்கள்), கவாஸ்கர் (3449 ரன்கள்) விளாசியிருந்தனர்.
மிக விரைவில் இந்த பட்டியலில் முதலிடத்தை பிடிக்கும் வாய்ப்பு கோலிக்கு பிரகாசமாக உள்ளது.
