kohli poor captaincy in ipl

கோலியின் கேப்டன்சியும் கள வியூகமும் கேள்விக்கு உள்ளாகி இருக்கிறது. கோலியின் மோசமான கேப்டன்சியும் அந்த அணியின் தொடர் தோல்விக்கு காரணமாக அமைகிறது. அதிலும் சென்னைக்கு எதிரான நேற்றைய போட்டியில் கோலியின் கேப்டன்சி மிகவும் மோசமாக இருந்தது என்றே கூற வேண்டும்.

ஐபிஎல் தொடரில் முதன்முறையாக கேப்டனாக பொறுப்பேற்றுள்ள ரவிச்சந்திரன் அஸ்வின், பஞ்சாப் அணியை சிறப்பாக வழிநடத்திவருகிறார். பவுலர்களை பயன்படுத்தும் விதம், வியூகங்கள், சோதனை முயற்சிகள் என அனைத்திலும் சிறந்து விளங்கும் அஸ்வின், கேப்டனாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

அதேநேரத்தில் வியூகங்கள், பவுலர்களை பயன்படுத்தும் விதம் ஆகியவற்றில் கோலி திறம்பட செயல்படுவதில்லை. இதுவரை ஐபிஎல் தொடரை வென்றிராத பஞ்சாப், பெங்களூரு, டெல்லி அணிகள் இந்த முறை ஐபிஎல்லை வெல்லும் முனைப்பில் களமிறங்கின. இவற்றில் டெல்லி அணியின் செயல்பாடு எந்தவகையிலுமே சிறந்ததாக இல்லை.

பஞ்சாப் அணியின் செயல்பாடு சிறப்பாக உள்ளது. அதற்கு கேப்டன் அஸ்வினின் கேப்டன்சிதான் முதன்மையான காரணம். ஆனால் பேட்டிங்கில் டிவில்லியர்ஸால் சிறந்து விளங்கும் பெங்களூரு அணி, கோலியின் தவறான அணுகுமுறையால் தொடர்ந்து தோல்வியை தழுவி வருகிறது.

நேற்றைய சென்னைக்கு எதிரான போட்டியில், டிவில்லியர்ஸின் அதிரடியால், 205 ரன்கள் குவித்தது பெங்களூரு அணி. 206 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியின் கேப்டன் தோனியின் அதிரடியான ஆட்டம் மற்றும் ராயுடுவின் பொறுப்பான ஆட்டத்தால் சென்னை அணி, கடின இலக்கை எளிதாக எட்டி வெற்றி பெற்றது.

இந்த போட்டியில், கடைசி நேரத்தில் பெங்களூரு அணியின் பவுலர்கள் திறம்பட பந்துவீசவில்லை என்றாலும் கோலியின் தவறான அணுகுமுறையே தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. 

கோலியின் மோசமான கேப்டன்சி - காரணங்கள்:

உமேஷ் யாதவின் 4 ஓவரையும் முதல் 8 ஓவர்களிலேயே முடித்துவிட்டார் கோலி. உமேஷ் யாதவின் பந்துவீச்சு எடுபடுகிறது என்பதால், அவருக்கு தொடர்ச்சியாக 4 ஓவர்களை கொடுத்து முடித்துவிட்டார். அதனால் கடைசி ஓவர்களை உமேஷ் யாதவிற்கு கொடுக்க முடியாமல் போனது.

சிறந்த சுழற்பந்து வீச்சாளராக வலம்வரும் வாஷிங்டன் சுந்தருக்கு ஒரே ஒரு ஓவர் மட்டுமே கொடுத்தார். பவர்பிளே ஓவர்களில் சிறப்பாக வீசும் சுந்தர், நேற்று ஒரே ஓவரில் 14 ரன்கள் கொடுத்தார். ஒரு ஓவரில் 14 ரன்களை விட்டுக்கொடுத்த சுந்தருக்கு அடுத்த ஓவரே கொடுக்கவில்லை கோலி. சுந்தரை இடையில் பயன்படுத்தியிருந்தால், உமேஷ் யாதவின் ஓவரை மிச்சப்படுத்தி கடைசி நேரத்தில் கொடுத்திருந்திருக்கலாம். 

14வது ஓவர் தான் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்து ஆட்டத்தின் போக்கையே மாற்றியது. பவன் நேகி வீசிய அந்த ஓவரில் தோனி இரண்டு சிக்ஸர்களும் ராயுடு ஒரு சிக்ஸரும் விளாசினர். அதன்பிறகு தோனியை கட்டுப்படுத்த முடியவில்லை. அந்த ஓவர்தான் இலக்கை எட்டிவிடலாம் என்ற முழு நம்பிக்கையை சென்னை அணிக்கு அளித்தது. நேகியை விட நல்ல லைன் அண்ட் லெந்தில் வீசக்கூடியவர் சுந்தர். ஆனால், அந்த ஓவரை வீச சுந்தரை அழைக்காமல் நேகியை அழைத்தார் கோலி. நேகி ஃபுல் லெந்தில் போட, விளாசி தள்ளினார் தோனி.

உமேஷ் யாதவின் ஓவர்கள் முன்கூட்டியே முடிந்ததால், கடைசி 4 ஓவர்களை சிராஜிற்கும் கோரி ஆண்டர்சனுக்கும் மாறி மாறி கொடுத்தார் கோலி. வேரியேசனே இல்லாத அவர்களின் ஓவர்களை வெளுத்து வாங்கினார் தோனி. 

இவையனைத்தையும் விட, நல்ல பவுலரான கோலின் டி கிராண்ட்ஹோமிற்கு பவுலிங்கே கொடுக்கவில்லை. கிராண்ட் ஹோம் ஒரு ஆல்ரவுண்டர். நன்றாக பந்துவீசக்கூடியவர். அவரை பவுலிங்கிற்கு பயன்படுத்தவே இல்லை என்பது, கோலியின் கேப்டன்சியின் குறைபாட்டை காட்டுகிறது. ஒரு பவுலரை பயன்படுத்தவே செய்யாத கேப்டன்சி என்ன மாதிரியானது? 

இவ்வாறு அடுக்கடுக்கான பல தவறுகளை செய்தார் கோலி. இதனால் போட்டியின் போக்கே மாறி போய்விட்டது. கோலியின் கேப்டன்சி இன்னும் மேம்பட வேண்டியிருக்கிறது.