“அதிகப் போட்டியில் தோல்வியை சந்திக்காத இந்திய அணி” என்ற பேரை இந்திய அணிக்கு வாங்கித் தந்துள்ளார் கேப்டன் கோலி.

கோலி தலைமையிலான இந்திய அணி வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியோடு சேர்த்து தொடர்ச்சியாக 19 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி அடைந்துள்ளது.

இதன்மூலம் அதிக போட்டிகளில் “இந்திய அணி தோல்வியை சந்திக்காமல் வழிநடத்திய கேப்டன்” என்ற பெருமையைப் பெற்றுள்ளார் விராட் கோலி.

முன்னதாக 1976 முதல் 1980 வரையிலான காலங்களில் சுநீல் கவாஸ்கர் தலைமையிலான இந்திய அணி தொடர்ச்சியாக 18 போட்டிகளில் தோல்வியை சந்திக்காமல் இருந்ததே சாதனையாக இருந்தது. அதை இப்போது கோலி முறியடித்துள்ளார்.

இதற்கடுத்த படியாக கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி 1985 முதல் 1987 வரையிலான காலங்களில் தொடர்ச்சியாக 17 போட்டிகளில் தோல்வியை சந்திக்காமல் இருந்துள்ளது.

கோலி தலைமையிலான இந்திய அணி தொடர்ச்சியாக 6 டெஸ்ட் தொடர்களை கைப்பற்றியுள்ளது. இதன்மூலம் இந்தியாவுக்கு தொடர்ச்சியாக அதிக டெஸ்ட் தொடர்களை வென்று தந்த கேப்டன் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

முன்னதாக 2008 முதல் 2010 வரையிலான காலங்களில் தோனி தலைமையிலான இந்திய அணி தொடர்ச்சியாக 5 தொடர்களை வென்றதே சாதனையாக இருந்தது. அதை இப்போது கோலி முறியடித்துள்ளார்.

கோலி தலைமையிலான இந்திய அணி 2015 முதல் தற்போது வரையிலான காலத்தில் இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள், தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து, இங்கிலாந்து, வங்கதேசம் ஆகிய அணிகளுக்கு எதிரான 6 தொடர்களை கைப்பற்றியுள்ளது.