இந்திய கேப்டன் விராட் கோலி தனது உணர்வுகளை வெளிப்படுத்தும் விஷயத்தில் இன்னும் கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக், ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான மொனாக்கோவில் பிடிஐக்கு நேற்று பேட்டி அளித்தார்.

அதில், "தென் ஆப்பிரிக்க தொடரின்போது கோலியை நான் கவனித்து வந்தேன். அவரது ஆக்ரோஷம் சற்று மிதமிஞ்சிய அளவில் உள்ளது. உணர்வுகளை வெளிப்படுத்தும் விஷயத்தில் கோலி இன்னும் கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. ஒரு கேப்டனாக வளர்ந்து வரும் கோலி, தனது உணர்வுகளை கட்டுப்படுத்துவதற்கு அவருக்கு இன்னும் சிறிது காலம் பிடிக்கும்.

சில வேளைகளில் ஆக்ரோஷத்தை வெளிக்காட்ட வேண்டியிருக்கும். சில வேளைகளில் கட்டுப்படுத்த வேண்டியிருக்கும். அந்த சரியான தருணத்தை அவர் அறிந்துகொள்ள வேண்டும்.

கோலி அணியின் மிகச் சிறந்த வீரராக இருக்கிறார். எப்போதும் நேர்மறையான சிந்தனையுடன்,தான் வேகமாக விளையாடுவதைப் போல அணியின் சக வீரர்களும் ஆடி வெற்றியை விரைவில் பெறவேண்டும் என நினைக்கிறார்.

ரஹானே, புஜாரா போன்ற வீரர்கள் அமைதியானவர்கள். வீரர்கள் வித்தியாசமானவர்கள் என்பதை கோலி புரிந்துகொள்ள வேண்டும்.

இந்தியா கடந்த இரண்டு ஆண்டுகளாக அனைத்து விதமான போட்டிகளிலும் சிறப்பான ரெக்கார்டுகளை வைத்துள்ளது. எனவே, கோலி அனைத்து ஃபார்மட்டுகளிலுமாக இந்தியாவை நம்பர்-1 ஆக்க வேண்டுமென விரும்புகிறார். ஆனால், இந்த காலகட்டத்தில் அது சற்று கடினம்.

ஆஸ்திரேலிய தொடரைப் பொருத்த வரையில், இந்தியா தனது சொந்த மண்ணில் எப்படி வலிமையான அணியோ, அதேபோன்றுதான் ஆஸ்திரேலியாவும். எனினும், ஆஸ்திரேலிய தொடரில் கோலி முக்கியப் பங்காற்றுவார்.

இந்த முறை ஆஸ்திரேலிய ஆடுகளமானது இந்தியாவுக்கு சாதகமான ஒன்றாக இருக்கும். எனவே, ஆஸ்திரேலிய தொடர் விறுவிறுப்பானதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை" என்று அவர் கூறினார்.