விராட் கோலி நல்ல வீரர் தான்; ஆனால் சச்சினுடன் ஒப்பிடும் அளவிற்கு தலைசிறந்த வீரர் கிடையாது என வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன் கார்ல் ஹூப்பர் கருத்து தெரிவித்துள்ளார்.

சமகால கிரிக்கெட்டின் மிகச்சிறந்த வீரராக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி திகழ்கிறார். சதங்களையும் சாதனைகளையும் குவித்துவரும் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரின் சாதனைகளை முறியடித்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

சச்சின் டெண்டுல்கருடன் சிலர் கோலியை ஒப்பிடுகின்றனர். வெவ்வேறு காலக்கட்டத்தில் ஆடிய வீரர்களை ஒப்பிட முடியாது, ஒப்பிடவும் கூடாது. ஆனால் தொடர்ந்து சச்சின், விவியன் ரிச்சர்ட்ஸ் போன்ற ஜாம்பவான்களுடன் சிலர் விராட் கோலியை ஒப்பிடுகின்றனர்.

இந்நிலையில், இதுகுறித்து பேசியுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன் கார்ல் ஹூப்பர், விராட் கோலி நல்ல வீரர் தான். ஆனால் தலைசிறந்த வீரரா? என்றால் அப்படி கூறிவிடமுடியாது. அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடியும் தருவாயில், அந்த இடத்தை பிடிக்கலாமே தவிர இப்போது அப்படி கூற முடியாது. 

அதேபோல் சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிடமுடியாது. சச்சின் ஆடிய காலக்கட்டம் வேறு; வெவ்வேறு காலக்கட்டத்தில் ஆடிய வீரர்களை ஒப்பிட முடியாது. சச்சின் டெண்டுல்கர், வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், ஆம்புரூஸ், குர்ட்னி வால்ஷ் போன்ற மிகச்சிறந்த பவுலர்களை எதிர்கொண்டு ஆடி ரன்களை குவித்தவர். ஆனால் தற்போதைய வெஸ்ட் இண்டீஸ் அணி சிறுபுள்ளைத்தனமாக ஆடுகின்றனர். அதனால் இவர்களுக்கு எதிராக ரன்களை குவிப்பது பெரிய விஷயமல்ல. அதனால் சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிடக்கூடாது என்று கார்ல் ஹூப்பர் தெரிவித்தார்.