kohli got angry in south africa press meet
இந்திய அணியின் சிறந்த 11 வீரர்களை நீங்களே சொல்லுங்கள். அவர்களை வைத்து விளையாடுகிறோம் என செய்தியாளரை கேப்டன் கோலி கடிந்தார்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-0 என இழந்தது. கேப்டவுனில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் 72 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோற்றது.
முதல் போட்டியில் பேட்டிங்கில் சொதப்பிய இந்திய அணி, இரண்டாவது டெஸ்டிலும் பேட்டிங்கில் சொதப்பி, 135 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று தொடரை இழந்தது.
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் 11 வீரர்களை கேப்டன் கோலி தேர்வு செய்ததே பெரும் விமர்சனத்துக்கு உள்ளானது. இந்தியாவின் சிறந்த ஓவர்சீஸ் பேட்ஸ்மேன் மற்றும் டெஸ்ட் போட்டிகளின் துணை கேப்டனான ரஹானேவை சேர்க்காதது, முதல் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட புவனேஷ்வர் குமாரை நீக்கிவிட்டு இஷாந்த் சர்மாவை சேர்த்தது, முதல் போட்டியில் ராகுலை சேர்க்காமல் தவானை சேர்த்தது, டெஸ்ட் போட்டியில் சிறப்பாக பந்துவீசும் உமேஷ் யாதவை சேர்க்காமல், பும்ராவை சேர்த்தது என இந்திய அணியின் தேர்வு குறித்த விமர்சனங்கள் நீண்டு கொண்டே போகின்றன.
கோலி தலைமையிலான இந்திய அணி கண்டிப்பாக தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரை வென்று வரலாற்று சாதனை படைக்கும் என முன்னாள் ஜாம்பவான்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அந்த நினைப்பை இந்திய அணி தவிடுபொடியாக்கிவிட்டது.
இரண்டாவது டெஸ்ட் போட்டி முடிந்ததும் செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணியின் கேப்டன் கோலியிடம், செய்தியாளர் ஒருவர், இந்திய அணி அதன் சிறந்த 11 பேருடன் இரண்டாவது டெஸ்ட்டில் இறங்கியதா? என்று கேட்டார்.
அதற்கு, ஆட்டத்தின் முடிவைப் பொறுத்து எந்த 11 பேர் விளையாடுவார்கள் என்று நாங்கள் முடிவு செய்வதில்லை. ஆனால், எங்களின் சிறந்த 11 பேரை வைத்து களமிறங்கியிருக்கலாம் என்று நீங்கள் சொல்கிறீர்கள். அப்படியானால், நீங்களே எங்களின் சிறந்த 11 பேர் யார் என்று சொல்லுங்கள். அவர்களை வைத்து களமிறங்குகிறோம். இந்தத் தோல்வி, எங்களை மிகவும் காயப்படுத்தியுள்ளது. ஆனால், ஆட்டத்துக்கு முன் ஒரு முடிவை எடுத்தோமேயானால், அதை முழுமையாக நாங்கள் நம்புவோம். அணியில் ஒரு புதுமையான விஷயத்தை நாங்கள் செய்து, அது சரியாக செயல்படவில்லை என்றால், கண்டிப்பாக அதன்மீது கேள்விகள் எழுப்பப்படும் என்பது எங்களுக்குத் தெரியும். அது, எங்களுக்கு பழகிவிட்டது. எனவே, ஒரு அணியாக மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதுகுறித்து நாங்கள் செவி மடுக்கப்போவதில்லை என கோலி கோபமாக பதிலளித்தார்.
