ஆஸ்திரேலிய மண்ணில் முதன்முறையாக டெஸ்ட் தொடரை வென்றதை அடுத்து கேப்டன் விராட் கோலி உச்சகட்ட மகிழ்ச்சியிலும் நெகிழ்ச்சியிலும் இருக்கிறார். அதை அவரது பேச்சே உணர்த்துகின்றன. 

ஆஸ்திரேலியாவில் முதன்முறையாக டெஸ்ட் தொடரை வென்று விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது. இந்த வெற்றி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வெற்றி மட்டுமல்ல.  டெஸ்ட் அணியின் தரத்தையும் திறமையையும் பறைசாற்றும் வெற்றி. 

தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து என தொடர்ந்து வெளிநாடுகளில் தோல்வியை தழுவி வந்த இந்திய அணிக்கு, புதிய உத்வேகத்தை அளிக்கும் வகையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரின் வெற்றி அமைந்துள்ளது. டெஸ்ட் தொடரில் நம்பர் 1 அணியாக இருந்தும் தொடர்ந்து வெளிநாடுகளில் இந்திய அணி தோற்றுவந்தது. அதனால் கேப்டன் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோரின் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. அதுமட்டுமல்லாமல் இந்திய டெஸ்ட் அணியும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. வீட்டில் புலி, வெளியே எலி என்றெல்லாம் கிண்டல் செய்யப்பட்டனர். 

அதற்கெல்லாம் பதிலடியாக இந்த வெற்றி அமைந்துள்ளது. ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றது உண்மையாகவே இந்திய அணிக்கு மிகப்பெரிய வெற்றி. 

இந்நிலையில், தொடரை வென்ற பிறகு பேசிய கேப்டன் விராட் கோலி, இப்படிப்பட்ட வீரர்களையும் இந்த அணியையும் வழிநடத்துவதற்கு நான் பெருமைப்படுகிறேன். இதுவரையிலான எனது கிரிக்கெட் வாழ்க்கையில் இதுதான் மிகப்பெரிய சாதனை. 2011ல் இந்திய அணி உலக கோப்பையை வென்றபோது, அந்த அணியிலேயே நான் தான் மிகவும் இளம் வீரர். கோப்பையை வென்றதும் அந்த சமயத்தில் சீனியர் வீரர்கள் உணர்வுப்பூர்வமாக நெகிழ்ந்தனர், உணர்ச்சிவசப்பட்டு சிலர் அழுதனர். ஆனால் அப்போது என்னால் அந்த உணர்வுகளை பெரிதாக புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால் இப்போது புரிகிறது. இந்த வெற்றி எங்களுக்கு வேற லெவல் அடையாளத்தை கொடுக்கும் என்று மகிழ்ச்சியுடனும் நெகிழ்ச்சியுடனும் பேசினார்.