kohli century and srilanka need 231 runs to win
இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், 231 ரன்களை இலங்கை அணிக்கு வெற்றி இலக்காக இந்தியா நிர்ணயித்துள்ளது.
இந்தியா வந்துள்ள இலங்கை அணி, 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. அதில், முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் நடைபெற்றுவருகிறது.
இந்த ஆட்டத்தின் முதல் இன்னிங்சில் பேட்டிங்கில் தடுமாறிய இந்திய அணி, 172 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து அதிர்ச்சி அளித்தது. முதல் இன்னிங்சில் இலங்கை அணி, 294 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் ஷிகர் தவாணும் கே.எல்.ராகுலும் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். தவாண் 94 ரன்களும் ராகுல் 79 ரன்களும் எடுத்தனர். புஜாரா 22 ரன்களுக்கு வெளியேறினார்.
முதல் இன்னிங்சில் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறிய கேப்டன் கோலி, இந்த இன்னிங்சில் அதிரடியாக ஆடி, டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 18வது சதத்தை பூர்த்தி செய்தார்.
8 விக்கெட் இழப்பிற்கு 358 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இந்திய அணி டிக்ளேர் செய்தது. 119 பந்துகளில் 104 ரன்கள் எடுத்த கோலி அவுட்டாகாமல் களத்தில் இருந்தார்.
இந்திய அணி, 230 ரன்கள் முன்னிலையில் உள்ளது. 231 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு இலங்கை விளையாடி வருகிறது. இன்று கடைசி நாள் என்பதால், ஆட்டம் டிராவில் முடிவதற்கான வாய்ப்புகளே அதிகம். எனினும் கடைசி நேர அதிசயம் நிகழ்ந்தால், ஏதாவது ஒரு அணிக்கு வெற்றி வாய்ப்பு கிட்டும். பேட்டிங்கில் அசத்தினால் இலங்கைக்கும் பவுலிங்கில் அசத்தினால் இந்தியாவுக்கும் வெற்றி வாய்ப்பு கிடைக்கும்.
