kohli and rohit performance in south africa tour

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் கேப்டன் விராட் கோலியும் ஷிகர் தவானும் மட்டுமே சிறப்பாக விளையாடி வருகின்றனர். ரோஹித் சர்மா மற்றும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து ஏமாற்றமளிக்கின்றனர்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியில் விராட் கோலியின் அபார சதத்தால் இந்திய அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில், சாஹல் மற்றும் குல்தீப்பின் சுழலில் தென்னாப்பிரிக்கா சுருண்டதால், இந்தியா எளிதில் வெற்றி பெற்றது. மூன்றாவது போட்டியிலும் ரோஹித் ஏமாற்றமளிக்க, கோலியின் அபார சதத்தால் இந்தியா 300ஐ தாண்டியது. நான்காவது போட்டியிலும் கோலியும் தவானும் மட்டுமே சிறப்பாக ஆடினர். 

டெஸ்ட் போட்டிகளில் சோபிக்காத ரோஹித், ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நான்கு போட்டிகளிலும் ஏமாற்றமளித்தார். 

முதல் போட்டியில் 20 ரன்கள் எடுத்த ரோஹித், இரண்டாவது போட்டியில் 15 ரன்களும் மூன்றாவது போட்டியில் ரன் ஏதும் எடுக்காமலும் அவுட்டானார். 4வது போட்டியிலும் வெறும் 5 ரன்கள் மட்டுமே எடுத்தார். 4 போட்டிகளிலும் சேர்த்தே 40 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இந்திய துணைக்கண்டத்தில் மட்டுமே ஜொலிக்கும் ரோஹித், தொடர்ச்சியாக ஓவர்சீஸ் போட்டிகளில் சொதப்பி வருகிறார்.

கேப்டன் கோலி மட்டுமே இந்திய அணிக்கு நம்பிக்கை அளிக்கிறார். முதல் போட்டியில் 112 ரன்களும் இரண்டாவது போட்டியில் அவுட்டாகாமல் 46 ரன்களும் எடுத்த கோலி, மூன்றாவது போட்டியில் 160 ரன்கள் குவித்து அசத்தினார். 4வது போட்டியில் 75 ரன்கள் என 4 போட்டிகளில் 393 ரன்கள் குவித்துள்ளார். 

நான்கு போட்டிகளிலும் சேர்த்து இந்திய அணி 981 ரன்கள் குவித்துள்ளது. இதில் 393 ரன்களை கோலியும் 271 ரன்களை தவானும் குவித்துள்ளனர். இவர்கள் இருவர் மட்டுமே 664 ரன்கள் குவித்துள்ளனர்.

அடுத்த ஆண்டு உலக கோப்பை நடக்க உள்ள நிலையில், ரோஹித் சர்மா சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். தொடக்க ஆட்டக்காரர்கள் ரோஹித் மற்றும் தவான் என்பது உறுதியாகிவிட்ட நிலையில், ரோஹித் ஓவர்சீஸ் போட்டிகளில் சிறப்பாக விளையாட வேண்டிய தேவை இந்திய அணிக்கு உள்ளது.