kohli and bumrah took top place in icc batting and bowling ranking

ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசையில் கேப்டன் விராட் கோலியும், பவுலிங்கில் பும்ராவும் முதலிடத்தில் உள்ளனர்.

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது. இதையடுத்து இந்திய அணி, ஐசிசி டி20 தரவரிசைப் பட்டியலில் 5-ம் இடத்தில் உள்ளது. முந்தைய இடத்தில் உள்ள இங்கிலாந்து அணி பெற்றுள்ள புள்ளிகளை நெருங்கிவிட்டது இந்திய அணி.

நியூஸிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் 103 ரன்களை எடுத்த விராட் கோலி 824 தரவரிசைப் புள்ளிகளுடன் பேட்டிங் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார். 2-ம் இடத்தில் உள்ள ஆரோன் பிஞ்ச், கோலியைக் காட்டிலும் 40 புள்ளிகள் பின் தங்கி உள்ளார்.

இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழும் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 724 தரவரிசைப் புள்ளிகளுடன் பந்து வீச்சில் முதலிடம் வகிக்கிறார். இவருக்கு நெருக்கமாக பாகிஸ்தானின் இமாத் வாசிம் 719 புள்ளிகளுடன் 2ம் இடத்தில் உள்ளார்.

இந்தியாவிடம் தொடரை இழந்ததன் மூலம் ஐசிசி டி20 தரவரிசையில் முதலிடத்தில் இருந்த நியூசிலாந்து அணி, முதலிடத்தை பாகிஸ்தானிடம் இழந்தது. தற்போது நியூசிலாந்து அணி 2-ம் இடத்தில் உள்ளது. 

டி20 போட்டிகளில் ஐசிசி தரவரிசையில் பேட்டிங் மற்றும் பவுலிங் ஆகிய இரண்டிலுமே இந்திய வீரர்கள் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளனர்.