Knoxville Challenger Climax First Time Degree Winner Leander Paes - Poorav Raja
நாக்ஸ்வில்லே சேலஞ்சர் டென்னிஸ் போட்டியில் இறுதிச்சுற்றில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் - பூரவ் ராஜா இணை முதல் முறையாக வாகைச் சூடி அசத்தியது.
நாக்ஸ்வில்லே சேலஞ்சர் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில், இந்திய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை இரவில் நடைபெற்றது .
இப்போட்டியின் இறுதிச்சுற்றில் லியாண்டர் பயஸ்-பூரவ் ராஜா இணை , அமெரிக்காவின் ஜேம்ஸ் செரட்டானி - ஆஸ்திரேலியாவின் பேட்ரிக் ஸ்மித் இணையை எதிர்கொண்டது.
இந்த ஆட்டத்தின் முடிவில் பயஸ் - பூரவ் இணை 7-6(4), 7-6(4) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது.
கடந்த ஆகஸ்ட் மாதம் வின்ஸ்டன் - சலேம் ஓபன் டென்னிஸ் போட்டி முதல் பயஸ் - பூரவ் இணை சேர்ந்து விளையாடி வருகின்றனர். அதில் அமெரிக்க ஓபனும் குறிப்பிடத்தக்க ஒன்று.
இந்த இணை முதல் முறையாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது இந்தப் போட்டியில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
லியாண்டர் பயஸ் இந்த சீசனில் வெல்லும் 4-ஆவது சேலஞ்சர் பட்டம் இதுவாகும். அதில் லியான் சேலஞ்சர், இல்க்லே சேலஞ்சர் ஆகிய போட்டிகளில் கனடாவின் ஆதில் ஷமாஸ்தினுடனும், டல்லாஹஸி சேலஞ்சரில் அமெரிக்காவின் ஸ்காட் லிப்ஸ்கியுடனும் இணைந்து பட்டம் வென்றார்.
பூரவ் ராஜா இதற்கு முன்பாக திவிஜ் சரணுடன் இணைந்து போர்டியாக்ஸ் சேலஞ்சரில் பட்டம் வென்றிருந்தார். அத்துடன் சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியில் அவருடன் இறுதிச்சுற்று வரை முன்னேறியிருந்தார்.
வெற்றிக்குப் பிறகு பூரவ் ராஜா பேசியது: "பயஸ் உடன் இணைந்து விளையாடும்போது அதிகம் கற்றுக் கொண்டேன். அடுத்து வரும் போட்டிகளிலும் சிறப்பாகச் செயல்படும் வகையில் எங்களிடையேயான ஒருங்கிணைப்பை மேம்படுத்திக் கொள்ள முயற்சிப்பேன்" என்று பேசினார்.
