Kirjiyos jokoviccai defeated in 47 minutes ...

மெக்ஸிகோ ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதியில் உலகின் இரண்டாம் நிலை வீரரான ஜோகோவிச்சை 47 நிமிடங்களில் ஜோகோவிச்சை வீழ்த்தினார் நிக் கிர்ஜியோஸ்…

மெக்ஸிகோவின் அகாபுல்கோவா நகரில் நடைபெற்று வரும் மெக்ஸிகோ ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச் தனது காலிறுதியில் 6-7 (9), 5-7 என்ற நேர் செட்களில் ஆஸ்திரேலியாவின் நிக் கிர்ஜியோஸிடம் தோல்வி கண்டார்.

ஆஸ்திரேலிய ஓபனின் 2-ஆவது சுற்றில் அதிர்ச்சித் தோல்வி கண்ட ஜோகோவிச், அதன்பிறகு மெக்ஸிகோ ஓபனில் பங்கேற்ற நிலையில், அதிலும் காலிறுதியோடு வெளியேறியுள்ளார்.

ஜோகோவிச்சுடன் முதல் முறையாக மோதிய நிக் கிர்ஜியோஸ் 47 நிமிடங்களில் ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தார். இதில் 25 ஏஸ் சர்வீஸ்களை விளாசிய கிர்ஜியோஸ், தனது முதல் சர்வீஸ் மூலம் 81 சதவீத புள்ளிகளைப் பெற்றார்.

அரையிறுதியில் நடால்: போட்டித் தரவரிசையில் 2-ஆவது இடத்தில் இருக்கும் ஸ்பெயினின் ரஃபேல் நடால் தனது காலிறுதியில் 7-6 (2), 6-3 என்ற நேர் செட்களில் ஜப்பானின் யோஷிஹிட்டோ நிஷியோகாவை தோற்கடித்தார்.

மெக்ஸிகோ ஓபனில் தொடர்ச்சியாக 13 ஆட்டங்களில் வெற்றி கண்டுள்ள நடால், தனது அரையிறுதியில் குரோஷியாவின் மரின் சிலிச்சை சந்திக்கிறார்.

முன்னதாக சிலிச் காலிறுதியில் விளையாடாமலேயே அரையிறுதிக்கு முன்னேறினார். காலிறுதியில் அவரை எதிர்த்து விளையாடவிருந்த அமெரிக்காவின் ஸ்டீவ் ஜான்சன் வலது கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகினார்.

மற்றொரு காலிறுதியில் அமெரிக்காவின் சாம் கியூரி 6-1, 7-5 என்ற நேர் செட்களில் ஆஸ்திரியாவின் டொமினிக் தீமை தோற்கடித்தார். சாம் கியூரி தனது அரையிறுதியில் நிக் கிர்ஜியோஸை சந்திக்கிறார்.