இந்திய டெஸ்ட் அணியிலிருந்து தொடர்ந்து புறக்கணிக்கப்படும் கருண் நாயர், இந்தியா ஏ அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிடம் தனது பேட்டிங் திறனை வளர்த்துக்கொள்ள பயிற்சி எடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்திய அணியில் வீரேந்திர சேவாக்கிற்கு அடுத்தபடியாக டெஸ்ட் கிரிக்கெட்டில் முச்சதம் அடித்த ஒரே வீரர் கருண் நாயர் தான். கடந்த 2016ம் ஆண்டு இங்கிலாந்துக்கு அணிக்கு எதிராக கருண் நாயர் முச்சதம் அடித்தார். எனினும் அவருக்கு தொடர்ந்து இந்திய அணியில் ஆட வாய்ப்பு கிடைக்கவில்லை. 

அண்மையில் இங்கிலாந்தில் நடந்த 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்த கருண் நாயர், ஒரு போட்டியில் கூட ஆட வைக்கப்படவில்லை. அது அவருக்கு மட்டுமல்லாமல் முன்னாள் ஜாம்பவான்கள், ரசிகர்கள் என அனைவருக்குமே ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. ஒரு போட்டியில் கூட வாய்ப்பு வழங்கப்படாமல் வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் புறக்கணிக்கப்பட்டார் கருண் நாயர்.

இதுதொடர்பாக தனது அதிருப்தியையும் கருண் நாயர் வெளிப்படுத்தியிருந்தார். ஆனால் அணியிலிருந்து நீக்கப்பட்டது தொடர்பாக கருண் நாயரிடம் பேசியதாகவும் தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக ஆடும்பட்சத்தில் டெஸ்ட் அணியில் மீண்டும் ஆடலாம் எனவும் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்திருந்தார்.

வெஸ்ட் இண்டீஸ் தொடரில் புறக்கணிக்கப்பட்ட கருண் நாயர், தனது அடுத்தகட்ட திட்டம் குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு அளித்த பேட்டியில் பேசியுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள கருண் நாயர், இப்போதைக்கு விஜய் ஹசாரே டிராபியில் கர்நாடக அணிக்காக சிறப்பாக ஆடுவதில் தான் எனது கவனம் உள்ளது. அடுத்த மாதம் நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் செய்து அந்நாட்டு ஏ அணியுடன் இந்தியா ஏ அணி ஆட உள்ளது. அந்த தொடரில் ராகுல் டிராவிட்டின் பயிற்சியின் கீழ் ஆட ஆர்வமாக உள்ளேன். 

ராகுல் டிராவிட்டிடம் நான் மேம்படுத்த வேண்டிய பேட்டிங் திறன்கள் குறித்து கேட்டு, அவர் கூறும் ஆலோசனைப்படி எனது திறமைகளை வளர்த்துக்கொள்வதில் தீவிரமாக உள்ளேன். டிராவிட் ஒரு ஆலோசகராகவும் பயிற்சியாளராகவும் எப்போதுமே உறுதுணையாக இருந்துள்ளார். அவரிடமிருந்து மேலும் பேட்டிங் குறித்து கற்றுக்கொள்ள ஆர்வமாக உள்ளேன் என கருண் நாயர் தெரிவித்துள்ளார்.