759 ரன்களுக்‍கு டிக்‍ளேர் செய்தது இந்தியா : கருண் நாயர் முச்சதம் அடித்து சாதனை!

இங்கிலாந்துக்‍கு எதிரான டெஸ்ட் போட்டியில் கருண் நாயரின் அபார முச்சதத்தால், இந்திய அணி முதல் இன்னிங்சில் 759 ரன்கள் எடுத்து டிக்‍ளேர் செய்தது. டெஸ்ட் கிரிக்‍கெட் வரலாற்றில் இந்தியா ஒரு இன்னிங்சில் அடித்த அதிகபட்ச ரன் இதுவாகும்.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்‍கிடையேயான 5 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் இந்திய அணி 3-0 என்ற கணக்‍கில், தொடரில் முன்னிலை வகிக்‍கிறது. இந்நிலையில் கடைசி டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்‍கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதல் இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து அணி 477 ரன்களுக்‍கு ஆட்டமிழந்தது. 

பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடத்தொடங்கிய இந்திய அணியின் தொடக்‍கமே வலுவான அடித்தளத்தை அமைத்தது. தொடக்‍க ஆட்டக்‍காரரான பர்தீவ் படேல் 71 ரன்களுக்‍கு ஆட்டமிழந்தார். ராகுல் சிறப்பாக விளையாடி துரதிர்ஷ்டவசமாக 199 ரன்களில் பெவிலியன் திரும்பினார். அதிரடியாக விளையாடிய கருண் நாயர் 381 பந்துகளில் 303 ரன்கள் அடித்து அவுட் ஆனார். இந்திய டெஸ்ட் கிரிக்‍கெட் வரலாற்றில் விரேந்தர் சேவாக்‍குக்‍கு அடுத்த படியாக முச்சதம் அடித்து கருண் நாயர் சாதனை படைத்துள்ளார். இதற்காக கருண் நாயக்‍கரை பாராட்டியுள்ள விரேந்தர சேவாக், இந்த சாதனை பட்டியலில் சுமார் 13 ஆண்டுகளாக தான் மட்டுமே தனித்து இருந்ததாகவும், தற்போது கருண் நாயரும் இதில் இணைந்துள்ளதாகவும் பாராட்டியுள்ளார். 

பின்னர் விளையாட வந்த அஷ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் அரை சதம் அடித்தனர். இறுதியில் இந்திய அணி 7 விக்‍கெட் இழப்புக்‍கு 759 ரன் எடுத்திருந்தபோது, டிக்‍ளேர் செய்வதாக அறிவித்தது. டெஸ்ட் கிரிக்‍கெட்டில் இந்திய அணியின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.

282 ரன்களுடன் பின்தங்கியுள்ள இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்சை விளையாடியது. ஆட்டநேர முடிவில் அந்த அணி விக்‍கெட் இழப்பின்றி 12 ரன்கள் எடுத்திருந்தது. Alistair Cook 3 ரன்களுடனும், Jennings 9 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.