இந்தியா இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ரூட்டின் கேட்ச்சை ராகுல் பிடித்தது தொடர்ந்து எழுந்த சர்ச்சைக்கு முன்னாள் வீரர்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.

முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தோல்வியை தழுவிய இந்திய அணி, வெற்றி முனைப்பில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆடிவருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 329 ரன்களை எடுத்தது. 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி, ஹர்திக் பாண்டியாவின் அபாரமான பந்துவீச்சால் 161 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதைத்தொடர்ந்து 168 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிவரும் இந்திய அணி, இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் எடுத்துள்ளது. 

இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸின் போது, 25வது ஓவரில்தான் ஹர்திக் பாண்டியா பந்துவீச அழைக்கப்பட்டார். பாண்டியா வீசிய முதல் பந்திலேயே ரூட்டின் பேட்டில் பட்டு பந்து எட்ஜ் ஆகி ஸ்லிப்பில் நின்ற ராகுலிடம் சென்றது. ராகுல் தரையை ஒட்டி வந்த பந்தை கேட்ச் பிடித்தார். இது அவுட்டா? இல்லையா? என்பது தெரியாததால், மூன்றாவது அம்பயரின் முடிவுக்கு விடப்பட்டது. இதுதொடர்பாக முடிவெடுப்பதற்கு மூன்றாவது அம்பயர் நீண்டநேரம் எடுத்துக்கொண்டார். நீண்டநேரம் ஆராய்ச்சிக்கு பிறகு மூன்றாவது அம்பயர் அவுட் கொடுத்தார். 

அம்பயர் அவுட் கொடுத்ததும் ரூட், அதிருப்தியை வெளிப்படுத்தினார். இந்நிலையில், இந்த கேட்ச் குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் வீரர்கள் மைக்கேல் வாகன், குமார் சங்ககரா ஆகியோர், அந்த கேட்ச் முறையாக பிடிக்கப்பட்டது தான் என்றும், அம்பயரின் முடிவு சரியானதுதான் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.