இலங்கை அணியின் முன்னாள் அதிரடி வீரர் ஜெயசூரியா மீது ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இலங்கை அணியின் முன்னாள் அதிரடி தொடக்க வீரர் சனத் ஜெயசூரியா, 1989ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை 22 ஆண்டுகள் இலங்கை அணிக்காக ஆடினர். நீண்ட நெடிய அனுபவம் கொண்ட ஜெயசூரியா, இலங்கை அணிக்காக 445 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 13,430 ரன்களும் 110 டெஸ்ட் போட்டிகளில் 6973 ரன்களும் எடுத்துள்ளார். 
 
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றதும் இலங்கை இலங்கை கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவராக இருந்தார். முதற்கட்டமாக 2013 முதல் 2015 வரையில் பொறுப்பில் இருந்த ஜெயசூரியா, பின்னர் 2016 முதல் 2017 வரை தலைவராக இருந்தார். ஜெயசூரியா தேர்வுக்குழு தலைவராக இருந்த காலக்கட்டத்தில் வீரர்கள் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து ஐசிசி-யின் ஊழல் தடுப்புப் பிரிவு விசாரணை நடத்தி வந்தது.

இந்நிலையில், தேர்வுக்குழுத் தலைவராக இருந்த ஜெயசூர்யா மீது ஐசிசி ஊழல் தடுப்பு பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஐசிசி ஊழல் தடுப்புப் பிரிவு விசாரணைக்கு ஒத்துழைக்காதது மற்றும் முறைகேடுகள் தொடர்பான ஆவணங்களை அழித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் ஜெயசூரியா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது. 

ஜெயசூரியா மீதான ஊழல் புகார் குறித்து இரண்டு வாரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என்று ஐசிசி உத்தரவிட்டுள்ளது. மேலும் இலங்கை கிரிக்கெட்டில் ஊழல் தொடர்பாக ஐசிசி விசாரணை ஓராண்டாக நடைபெற்று வருவது மற்றும் கிரிக்கெட் ஊழல் குறித்து இலங்கை அதிபர், பிரதமர், விளையாட்டுத் துறை அமைச்சர் ஆகியோருக்கும் ஐசிசி ஊழல் தடுப்புப் பிரிவு தகவல் அளித்துள்ளது.