நியூசிலாந்துக்கு எதிரான நான்கு ஒருநாள் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், கடைசி போட்டி நாளை நடக்க உள்ளது. 

5 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் மூன்று போட்டிகளிலும் பேட்டிங் மற்றும் பவுலிங் ஆகிய இரண்டிலுமே ஆதிக்கம் செலுத்தி ஆடிய இந்திய அணி, நான்காவது போட்டியில் அதற்கு நேர்மாறாக ஆடியது. விராட் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டதால், அவருக்கு பதிலாக இளம் வீரர் ஷுப்மன் கில் அணியில் சேர்க்கப்பட்டிருந்தார். அவரும் அறிமுக போட்டியில் சோபிக்க தவறிவிட்டார். 

மீண்டும் ஃபார்முக்கு திரும்பியுள்ள தோனி, முதல் இரண்டு போட்டிகளில் ஆடினார். தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக மூன்றாவது மற்றும் நான்காவது போட்டிகளில் ஆடவில்லை. அவருக்கு பதிலாக ஆடிய தினேஷ் கார்த்திக், மூன்றாவது போட்டியில் நன்றாக ஆடி போட்டியை வெற்றிகரமாக முடித்துவைத்தார். ஆனால் நான்காவது போட்டியில் சொதப்பிவிட்டார். டாப் ஆர்டர்களையே பெரும்பாலும் சார்ந்துள்ளது இந்திய அணி. அவர்கள் சோபிக்காத போட்டிகளில் மிடில் ஆர்டர்கள் பொறுப்புடன் ஆடி அணியை மீட்டெடுக்க தவறிவிடுகின்றனர். 

கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டிருப்பதால் அவரும் ஆடவில்லை. இந்நிலையில், தோனியும் ஆடாதது இந்திய அணியின் மிடில் ஆர்டரில் சிக்கலை ஏற்படுத்திவிட்டது. எனவே கடைசி போட்டியில் தோனி ஆடியாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 

காயத்திலிருந்து குணமடைந்த தோனி, நாளைய போட்டியில் ஆடுவது உறுதியாகி விட்டது. தோனி ஆடுவது மிடில் ஆர்டரில் இந்திய அணிக்கு கூடுதல் பலமாக அமையும். 

இந்நிலையில் தோனி குறித்து பேசியுள்ள நியூசிலாந்து ஆல்ரவுண்டர் ஜேம்ஸ் நீஷம், தோனியின் ரெக்கார்டுகளே அவர் யார் என்பதை சொல்லும். அவர் ஒரு மிகச்சிறந்த வீரர். இந்திய ஊடகங்கள் சில, தோனி உலக கோப்பையில் ஆடுவது குறித்த கேள்விகளையும் சந்தேகத்தையும் எழுப்புகின்றன. தோனி மிடில் ஆர்டரில் ஆடுவதே இந்திய அணிக்கு மிகப்பெரிய பலம். தோனிக்கு பந்துவீசும்போது, அவரை வீழ்த்தினால்தான் நாம் வெற்றி பெற முடியும் என்பதை பவுலர்கள் மனதில் கொள்ள வேண்டும். அந்த வகையில், நாங்கள் அவருக்கு நாளை அப்படித்தான் பந்துவீச உள்ளோம் என்று ஜேம்ஸ் நீஷம் தெரிவித்துள்ளார்.