நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி, ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் ஆடிவருகிறது. 

5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 4-1 என இந்திய அணி வென்று அசத்தியுள்ளது. ஒருநாள் தொடரின் நான்காவது போட்டியை தவிர மற்ற அனைத்து போட்டிகளிலும் அபாரமாக ஆடி வெற்றி பெற்றது. முதல் மூன்று போட்டிகளிலும் பேட்டிங், பவுலிங் என அனைத்து வகையிலும் நியூசிலாந்து அணியின் மீது ஆதிக்கம் செலுத்தி ஆடி இந்திய அணி வெற்றி பெற்றது. நான்காவது போட்டியில் மட்டும் படுமோசமாக ஆடி, படுதோல்வியடைந்தது. 

அந்த படுதோல்வியிலிருந்து ஒரு அணியாக மீண்டெழுந்து, கடைசி போட்டியில் மீண்டும் அபாரமாக ஆடி வெற்றி பெற்றது. 18 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்த போதிலும் அதிலிருந்து மீண்டெழுந்து 252 ரன்களை எட்டிய இந்திய அணி, அந்த இலக்கை எட்டவிடாமல் நியூசிலாந்து அணியை சுருட்டி, 35 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி வரும் 6ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில், நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் மார்டின் கப்டில் கடைசி ஒருநாள் போட்டியில் காயமடைந்துள்ளார். அவருக்கு முதுகுப்பகுதியில் ஏற்பட்ட காயத்தை அடைத்து டி20 தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக அதிரடி ஆல்ரவுண்டர் ஜேம்ஸ் நீஷம் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

ஜேம்ஸ் நீஷம், நேற்று நடந்த கடைசி ஒருநாள் போட்டியில் அபாரமாக ஆடி இந்திய அணியை அச்சுறுத்தினார். அவரை 44 ரன்களில் தனது சமயோசித புத்தியால் ரன் அவுட் செய்தார் தோனி. அதன்பிறகுதான் இந்திய அணியின் வெற்றி உறுதியானது. இல்லையென்றால் நீஷம் தனி ஒரு வீரராக அடித்து இலக்கை எட்டியிருக்கக்கூட வாய்ப்பிருக்கிறது. 

டி20 தொடருக்கான நியூசிலாந்து அணி:

கேன் வில்லியம்சன்(கேப்டன்), கோலின் முன்ரோ, ஜேம்ஸ் நீஷம், கோலின் டி கிராண்ட்ஹோம், ரோஸ் டெய்லர், பிரேஸ்வெல், சாண்ட்னெர், ஃபெர்குசன், ஸ்காட் குஜ்ஜெலின், மிட்செல், இஷ் சோதி, டிம் சௌதி, டிம் செஃபெர்ட்.