இந்திய டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன் கோலி குறித்து இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் விமர்சித்திருப்பதற்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
"இந்திய கேப்டன் கோலியின் விளையாட்டு நுட்பங்களில் குறை இருக்கிறது. இந்திய ஆடுகளங்களில் பந்துகள் எகிறுவதில்லை. பெரிய அளவில் ஸ்விங்கும் ஆவதில்லை. அதனால்தான் கோலியின் நுட்பங்களில் உள்ள குறை வெளியே தெரிவதில்லை' என ஆண்டர்சன் கூறியிருந்தார். இதற்கு கோலியும் தகுந்த பதிலடி வழங்கியிருந்தார்.
இந்நிலையில் இதுகுறித்து இந்திய அணி முன்னாள் கேப்டன் கபில் தேவ், பதிலடி கொடுத்துள்ளார்.
அவர், “இங்கிலாந்து உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் விராட் கோலியால் ரன்கள் சேகரிக்க இயலும். ஒரு இந்திய வீரர் இவ்வாறு விளையாடுவது பெருமை அளிக்கிறது. அவரைப் போன்ற ஒரு கிரிக்கெட் வீரரை நான் கண்டதில்லை.
என்னைப் பொருத்த வரையில் கோலியின் சாதனைகளை பார்க்குமாறு கூறுவேன். அவர் எவ்வாறு சிறந்த வீரர் என்ற கேள்விக்கு அதுவே பதில் தரும். தொடர்ச்சியாக 5 டெஸ்ட் தொடர்களை அவர் தலைமையிலான இந்திய அணி வென்றுள்ள போதிலும், கோலியின் தலைமைப் பண்பை இப்போதே மதிப்பிடுவது சரியாக இருக்காது. கிரிக்கெட்டில் அவர் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது.
கோலி தனது கிரிக்கெட் வாழ்க்கையில் இப்போது இருக்கும் ஃபார்மைப் பார்க்கும்போது, அவரது கண் கண்ணாடி கூட ரன்கள் சேகரிக்கும் என கூறலாம்” என்று கபில் தேவ் கூறினார்.
