சொன்னபடி செய்துகாட்டி தான் வாய்ச்சொல் வீரனல்ல; செயல் வீரன் என நிரூபித்துள்ளார் ரவீந்திர ஜடேஜா. 

இந்திய அணியில் ரிஸ்ட் ஸ்பின்னர்களான குல்தீப் மற்றும் சாஹலின் வருகைக்கு பிறகு ஜடேஜா மற்றும் அஷ்வின் ஆகிய இருவரும் ஓரங்கட்டப்பட்டனர். ஜடேஜாவும் அஷ்வினும் நீண்டகாலமாக ஆடிவருவதால் 2019 உலக கோப்பையை மனதில் வைத்து ரிஸ்ட் ஸ்பின்னர்களை இந்திய அணி பயன்படுத்திவருகிறது. 

அதனால் கடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு பிறகு ஜடேஜாவிற்கு இந்திய அணியில் ஆட வாய்ப்பு கிடைக்கவில்லை. டெஸ்ட் போட்டிகளிலும் அஷ்வின் மட்டுமே சேர்க்கப்பட்டு வந்தார். இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் ஆட வாய்ப்பு பெற்ற ஜடேஜா, பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே சிறப்பாக செயல்பட்டு தேர்வாளர்களின் கவனத்தை மீண்டும் ஈர்த்தார். 

ஓராண்டாக இந்திய அணியில் ஆட வாய்ப்பு கிடைக்காத நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் ஆடிய ஜடேஜா, தனது விருப்பம் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார். அப்போது, எனக்கு கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி நன்றாக ஆடினால் மீண்டும் அனைத்து விதமான போட்டிகளுக்கான இந்திய அணியிலும் ஆட வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன். ஒரே ஒரு விதமான கிரிக்கெட்டில் மட்டுமே ஆடுவது என்பது சற்று கடினமான விஷயம். ஏனென்றால் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஆட வேண்டியிருக்கும். அது கடினம். அதே அனைத்து விதமான போட்டிகளிலும் ஆடும்போது, தொடர்ந்து ஆடும் வாய்ப்பு கிடைப்பதால் சிறப்பாக செயல்படமுடியும் என ஜடேஜா தெரிவித்திருந்தார்.

அந்த வகையில், ஆசிய கோப்பை தொடரில் ஹர்திக் பாண்டியாவிற்கு ஏற்பட்ட காயத்தின் விளைவாக அவருக்கு பதிலாக ஜடேஜா மீண்டும் அழைக்கப்பட்டார். சூப்பர் 4 சுற்றில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் நேற்று ஜடேஜா களமிறக்கப்பட்டார். ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் ஓராண்டுக்கு பிறகு மீண்டும் ஆட கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டார் ஜடேஜா. அருமையாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தி வங்கதேச அணியை 173 ரன்களுக்கு சுருட்டுவதற்கு முக்கிய காரணமாக திகழ்ந்தார். ஆட்டநாயகன் விருதையும் வென்றார். 

தனக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்தால் தனது திறமையை நிரூபித்து, மீண்டும் அனைத்து விதமான போட்டிகளிலும் வாய்ப்பு பெற முடியும் என்று நம்புவதாக தெரிவித்திருந்த ஜடேஜா, கிடைத்த வாய்ப்பை சொன்னபடியே பயன்படுத்தி தனது திறமையை நிரூபித்து காட்டியுள்ளார்.