காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஐபிஎல் போட்டிகள் நடந்த சேப்பாக்கம் மைதானத்தில் நாம் தமிழர் கட்சியினர் வீசிய காலணியைக் கொண்டு சிஎஸ்கே வீரர் ஜடேஜா சில நொடிகள் ஃபுட் பால் விளையாடினார்.

போராட்டக்காரர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றன. சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் இடையே விறுவிறுப்பாக போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, கடும் பாதுகாப்பையும் மீறி ஸ்டேடியத்துக்குள் நுழைந்த நாம் தமிழர் கட்சியினர், மைதானத்துக்குள் திடீரென காலணிகளை வீசினர்.

மேலும் தங்களிடம் இருந்த கொடிகளையும் மைதானத்துக்குள் வீசி எறிந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த வீரர்கள், சற்றுநேரம் போட்டிகளை நிறுத்தினர். உடனடியாக அங்குவந்த போலீசார், நாம் தமிழர் கட்சித் தொண்டர்களை கைது செய்தனர்.

நாம் தமிழர் கட்சியினர் வீசிய  காலணிகள் சென்னை அணியின் வீரர் ஜடேஜா அருகே விழுந்தது.இதையடுத்து ஜடேஜா அந்த காலணியைக் கொண்டு சில நொடிகள் கால் பந்து விளையாடினார்.

இதைத் தொடர்ந்து பந்து பொறுக்கிப் போடும் சிறுவன் வேகமாக வந்து அந்த காலணியை அப்புறப்படுத்தினார்.