ஐடிஎஃப் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் அங்கிதா ரெய்னா மகளிர் ஒற்றையர் பிரிவில் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் வீராங்கனையுடம் மோதுகிறார்.

ஐடிஎஃப் டென்னிஸ் போட்டி மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் நடைபெறுகிறது. இதில், அரையிறுதியில் ரஷியாவின் யானா சிஸியாகோவாவை எதிர்கொண்டார் அங்கிதா. 

இந்த ஆட்டத்தில் அங்கிதா 6-2, 4-0 என முன்னிலையில் இருந்தபோது உடல்நலக் குறைவு காரணமாக போட்டியிலிருந்து விலகுவதாக யானா அறிவித்தார். இதனையடுத்து அங்கிதா இறுதி ஆட்டத்துக்கு முன்னேறினார். 

சர்வதேச தரவரிசையில் இந்திய வீராங்கனைகள் வரிசையில் முதலிடத்தில் இருக்கும் அங்கிதா இந்த சீசனில் இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது இதுவே முதல் முறையாகும். இறுதி ஆட்டத்தில் அங்கிதா, பிரான்ஸின் அமான்டைன் ஹீசியுடன் பலப்பரீட்சை நடத்துகிறார்.

அமான்டைன் தனது அரையிறுதியில் ஸ்லோவேகியாவின் தெரெஸா மிஹாலிகோவாவை 6-4, 6-2 என்ற செட்களில் வீழ்த்தியிருந்தார்.

இறுதி ஆட்டம் குறித்து அங்கிதா, "இறுதி ஆட்டத்துக்கு முன்னேறும் எந்த வீராங்கனையும் நல்லதொரு ஃபார்மில் இருப்பார்கள். எனவே, சிறப்பானதொரு ஆட்டத்தை விளையாட எதிர்நோக்கியிருக்கிறேன்' என்று கூறினார்.