- Home
- Sports
- Sports Cricket
- SL vs AUS: ஆஸ்திரேலியாவை அலற விட்ட இலங்கை.. டி20 உலகக்கோப்பையில் இருந்து நடையை கட்டும் ஆஸி!
SL vs AUS: ஆஸ்திரேலியாவை அலற விட்ட இலங்கை.. டி20 உலகக்கோப்பையில் இருந்து நடையை கட்டும் ஆஸி!
இலங்கையுடனான தோல்வியால் ஆஸ்திரேலியா கிட்டத்தட்ட வெளியேறி விட்டது என்றே சொல்லலாம். நாளை அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் ஜிம்பாப்வே வெற்றி பெற்றால் ஆஸ்திரேலியா அணி டி20 உலகக்கோப்பையில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறி விடும்.

டி20 உலகக்கோப்பை 2026
டி20 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்துள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 20 ஓவர்களில் 181 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
ஆஸ்திரேலியாவுக்கு கேப்டன் மிட்செல் மார்ஷ் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் அரைசதம் அடித்து சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். தொடக்க விக்கெட்டுக்கு இருவரும் 8.1 ஓவர்களில் 104 ரன்கள் சேர்த்தனர்.
கடைசியில் சரிந்த ஆஸ்திரேலியா பேட்டிங்
இதனால் அந்த அணி 200 ரன்களை எளிதாக தாண்டும்போல் தோன்றியது. ஆனால் ஹெட், மார்ஷ் ஆட்டமிழந்த பிறகு, சுழற்பந்து வீச்சாளர்கள் மூலம் ஆஸ்திரேலியாவை இலங்கை கட்டுப்படுத்தியது. பின்னர் வந்த வீரர்களில் ஜோஷ் இங்லிஸ் (27), கிளென் மேக்ஸ்வெல் (22) ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்க ரன்களை எட்டினர்.
மற்ற அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறினார்கள். இதனால் ஆஸ்திரேலியாவில் 181 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இலங்கை பவுலர் துஷன் ஹேமந்த மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இலங்கை அணி சிறப்பான தொடக்கம்
பின்பு சவாலான இலக்கை துரத்திய இலங்கை அணி 18 ஓவரில் 2 விக்கெட் மட்டுமே இழந்து 184 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. அந்த அணியின் தொடக்க வீரர் குசல் பெரேரா ஒரு ரன்னில் வெளியேறினார். இதன் பிறகு ஜோடி சேர்ந்த பதும் நிசங்காவும் குசால் மெண்டிஸும் இணைந்து இலங்கைக்கு வலுவான பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
பதும் நிசங்கா சூப்பர் சதம்
சூப்பராக விளையாடிய இருவரும் அரை சதம் கடந்தனர். சூப்பராக பேட்டிங் செய்த குசால் மெண்டிஸ் 38 பந்துகளில் 6 பவுண்டரி, 1 சிக்சருடன் 51 ரன்கள் எடுத்தார். மறுமுனையில் வெறித்தனமாக ஆடிய பதும் நிசங்கா 52 பந்துகளில் 10 பவுண்டரி, 5 சிக்சருடன் 100 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்து தனது அணியை வெற்றி பெற வைத்தார்.
பவன் ரத்நாயக் (15 பந்தில் 28 ரன்) அவருக்கு உறுதுணையாக இருந்தார். ஆஸ்திரேலியாவின் தோல்வி அந்த அணியின் சூப்பர் 8 வாய்ப்புகளை கேள்விக்குறியாக்கியுள்ளது. அந்த அணி கிட்டத்தட்ட வெளியேறி விட்டது என்றே சொல்லலாம்.
டி20 உலகக்கோப்பையில் இருந்து வெளியேறும் ஆஸ்திரேலியா
ஏனெனில் ஜிம்பாப்வே அணி இலங்கை மற்றும் அயர்லாந்திடம் தோற்றால் தான் ஆஸ்திரேலியா அணி அடுத்த சுற்று வாய்ப்பை நினைத்து பார்க்க முடியும். அதுவும் ஓமனை ஆஸ்திரேலியா ஜெயித்த பிறகு ரன் ரேட்டை வைத்து தான் அதையும் சொல்ல முடியும்.
நாளை நடைபெறும் ஜிம்பாப்வே-அயர்லாந்து போட்டியின் முடிவு ஆஸ்திரேலியாவுக்கு முக்கியமானதாக மாறியுள்ளது. நாளை ஜிம்பாப்வே வெற்றி பெற்றால் ஆஸ்திரேலியா அணி டி20 உலகக்கோப்பையில் இருந்து அதிகாரப்பூர்வமாக் வெளியேறி விடும்.

