இந்திய இரட்டையர் வீரர்கள் டூர் போட்டிகளில் இணைந்து விளையாடாத பட்சத்தில், டேவிஸ் கோப்பை போட்டியில் வெற்றி பெறுவது கடினமாக இருக்கும் என்று முன்னாள் டென்னிஸ் வீரர் விஜய் அமிர்தராஜ் கூறியுள்ளார்.

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் இந்தியா - சீனா மோதும் ஆட்டம் ஏப்ரல் மாதம் நடைபெறுகிறது. இதில் இரட்டையர் பிரிவில் லியாண்டர் பயஸ் - ரோஹன் போபண்ணா இணை பங்கேற்பதென அகில இந்திய டென்னிஸ் சங்கம் முடிவு செய்தது.

கருத்து வேறுபாடு காரணமாக லியாண்டருடன் விளையாட விருப்பமில்லாத போபண்ணா, தான் 'ரிசர்வ்' வீரராக இருக்க விருப்பம் தெரிவித்தார். எனினும், பயஸுடன் அவர் இணை சேர்க்கப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இதுகுறித்து விஜய் அமிர்தராஜ், "கருத்து வேறுபாடு இருக்கும் வீரர்களை ஒன்றாக களத்தில் இறக்குவது சரியா என்பது எனக்குத் தெரியாது. ஆனால், ஒரு இரட்டையர் இணை டூர் போட்டிகளில் ஒருங்கிணைந்து விளையாடினால், டேவிஸ் கோப்பையிலும் இணைந்து விளையாடி வெற்றி பெற இயலும்.

அவர்கள் தொடர்ந்து இணைந்து, டூர் போட்டிகளில் விளையாடாத பட்சத்தில், டேவிஸ் கோப்பை போட்டியில் வெற்றி பெறுவது கடினமாக இருக்கும். ஏனெனில், இணைந்து விளையாடாத இருவரை திடீரென ஒரு போட்டியில் இணைந்து விளையாடச் செய்யும்போது அவர்களிடையே தடுமாற்றம் ஏற்படும்.

இந்தியாவில் ஜெய்தீப் முகர்ஜி - பிரேம்ஜித் லால், ஆனந்தும் - நானும், லியாண்டர்  - மகேஷ் பூபதி என அனைத்து இணைகளுமே எல்லா போட்டிகளிலும் இணைந்து விளையாடியதாலேயே சிறப்பாக ஆட முடிந்தது" என்று அவர் கூறினார்.