இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி - பெங்களூரு எஃப்சி அணிகள் இன்று மோதுகின்றன.

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் சென்னை அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை குறி வைக்கிறது. 

சுனில் சேத்ரி தலைமையிலான பெங்களூரு அணி முதல் பட்டத்தை வெல்லும் முனைப்பில் தீவிரமாக உள்ளது. 

இந்த இரு அணிகளில் சென்னையைப் பொருத்த வரையில் 18 லீக் ஆட்டங்களில் 9 வெற்றிகளைப் பதிவு செய்து பிளே ஆஃபுக்கு முன்னேறி வந்தது. 

இந்த சீசனில் புதிய பயிற்சியாளரான ஜான் கிரேகரியின் வழிகாட்டுதலிலும், ஜேஜே உள்ளிட்ட முக்கிய வீரர்களின் துணையிலும் சென்னை அணி இந்த இடத்துக்கு வந்துள்ளது.

ஜேஜே இந்த சீசனில் 9 கோல்கள் அடித்துள்ளார். அவரும், ரஃபேல் அகஸ்டோவும் பெங்களூரு தடுப்பாட்டத்தை அசைத்துப் பார்ப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. பிக்ரம்ஜித் சிங், தனபால் கணேஷ் ஆகியோர் அணியின் நடுகள ஆட்டத்துக்கு பொறுப்பில் உள்ளனர்.

ஹென்ரிக் செரீனோ, மெயில்சன் ஆல்வ்ஸ் உள்ளிட்டோர் பெங்களூரின் கோல் வாய்ப்புகளை தடுக்கும் பொறுப்பில் உள்ளனர். கோல்கீப்பர் கரன்ஜித் சிங் அணியின் கோஸ் போஸ்ட்டுக்கு காவலாக இருப்பார்.

பெங்களூரு அணி சென்னைக்கு சவாலாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. 18 லீக் ஆட்டங்களில், 13-ல் வென்று பிளே ஆஃபுக்குள் புயலாக நுழைந்தது பெங்களூரு. 

ஐஎஸ்எல் போட்டிக்கு முன்பாக, ஃபெடரேஷன் கோப்பை, ஐ-லீக் கால்பந்து போட்டிகளில் பெங்களூரு அணி இரு முறை சாம்பியனாகியுள்ளது. எனவே, சேத்ரி தலைமையிலான பெங்களூரு, ஐஎஸ்எல் போட்டியில் உள்ளூர் ரசிகர்கள் முன்னிலையில் தனது முதல் சாம்பியன் கோப்பையை முத்தமிட அதிதீவிர முனைப்பு காட்டும். 

இந்த அணியில் மிகு மற்றும் சேத்ரி அணிக்கு பெரிய பலம். இந்த சீசனில் அதிக கோல் அடித்த வீரர்கள் வரிசையில் மிகு 14 கோல்களுடன் 2-ஆவது இடத்தில் உள்ளார். 

தடுப்பாட்டத்தில் டெல்காடோ, ஜான் ஜான்சன், ரோட்ரிகஸ், ராகுல் பெக்கே ஆகியோர் பலம் சேர்க்க, கோல்கீப்பிங் பணியை குருபிரீத்சிங் சாந்து சிறப்பாகச் செய்வாரா என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.