இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா தன்னிடம் உள்ள திறமையை இன்னும் உணர்ந்து கொள்ளவில்லை என்று முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் தெரிவித்தார்.

முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் பிடிஐ செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "தனது திறமையை உணர்ந்து தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா பந்துவீச வேண்டும். இஷாந்த், அவரிடம் உள்ள திறமையை இன்னும் உணர்ந்து கொள்ளவில்லை என எண்ணத் தோன்றுகிறது. அவர் நல்ல உயரமாக இருக்கிறார். சிறப்பாக வேகப்பந்தை வீசுகிறார். இருப்பினும், என்ன பிரச்சனை என்று புரியவில்லை.

இந்திய அணியில் இடம்பெற்று 10 ஆண்டுகளை கடந்துவிட்டார் இஷாந்த். ஆனால், அணியில் இன்னமும் தனக்கான இடத்தை அவர் ஏற்படுத்திக் கொள்ளவில்லையோ என்று தோன்றுகிறது.

தன்னிடம் உள்ள திறமையை அவர் முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும். முன்னாள் வீரர்கள் ஜாகீர் கான், கபில்தேவ் உள்ளிட்டோரின் இடத்தை அவர் பூர்த்தி செய்ய வேண்டும்.

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக விளையாட இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளவர்கள் அனைவரும் அங்கு நிலவும் சூழ்நிலையை எப்படி எதிர்கொள்ள போகிறார்கள் என்பது மட்டுமே முக்கியம். ஏனென்றால் 10 முதல் 15 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது போன்ற மைதானங்கள் அந்நாட்டில் இன்றில்லை.

அதிக பவுன்ஸ் ஆகும் நிலை இருப்பது வேண்டுமானாலும் வேகப்பந்துவீச்சாளர்களுக்குக் கை கொடுக்கும். அதை நமது பந்துவீச்சாளர்கள் எப்படி பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதுதான் முக்கியம்.

தென்னாப்பிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் டேல் ஸ்டெயின், மார்கெல் ஆகியோர் நமது பேட்ஸ்மேன்களை அச்சுறுத்துவார்கள் என்று நான் கருதவில்லை. அதேநேரம், அந்நாட்டு அணியில் இடம்பெற்றுள்ள இளம் வேகப்பந்து வீச்சாளரான ககிசோ ரபாடாவை மட்டும் நமது பேட்ஸ்மேன்கள் அதிக கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
 
ஒவ்வோர் ஆண்டும் நமது அணி, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. ஒவ்வொரு முறையும் பந்துவீச்சாளர்களுக்கு அதிக அழுத்தம் தரப்படுகிறது. அந்த நிலை இம்முறை மாற வேண்டும்.

நமது பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடி வருகின்றனர். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரிலும் நமது பேட்ஸ்மேன்கள் சிறப்பான பங்களிப்பை அளித்து அணியின் ஸ்கோரை 350-க்கும் மேல் உயர்த்த வேண்டும்" என்று வெங்கடேஷ் பிரசாத் கூறினார்.