இந்தியா - ஆஸ்திரேலியா இடையே பெர்த்தில் நடந்துவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 326 ரன்களை எடுத்தது. 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி, விராட் கோலியின் அபார சதம் மற்றும் ரஹானேவின் பொறுப்பான அரைசதத்தால் 283 ரன்கள் சேர்த்தது. 

43 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்துள்ளது. மூன்றாம் நாள் முடிவில் 175 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. 

ஆஸ்திரேலிய அணியின் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய இஷாந்த் சர்மா, இரண்டாம் நாளான நேற்றைய ஆட்டம் முடிந்ததும் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அவரிடம் அதிகமான நோ பால்கள் வீசுவது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த இஷாந்த் சர்மா, இதுகுறித்து ஆஸ்திரேலிய ஊடகங்கள்தான் பதிலளிக்க வேண்டும். நான் இல்லை. நான் நீண்டகாலமாக கிரிக்கெட் ஆடிவருகிறேன். இதெல்லாம் நடக்கத்தான் செய்யும். மனிதர்கள் என்றாலே தவறுகள் நடப்பது இயல்புதான். அதனால் நான் இதைப்பற்றியெல்லாம் கவலைப்பட்டதில்லை, படுவதுமில்லை என்று பதிலளித்தார்.