ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஜடேஜாவும் இஷாந்த் சர்மாவும் மோதிக்கொண்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே பெர்த்தில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 146 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-1 என சமன் செய்தது ஆஸ்திரேலிய அணி. 

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 326 ரன்களையும் இந்திய அணி 283 ரன்களையும் எடுத்தது. 43 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி 243 ரன்களை எடுத்தது. இதையடுத்து 287 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி வெறும் 140 ரன்களுக்கே ஆல் அவுட்டானது. 146 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. 

இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் இரண்டாவது இன்னிங்ஸின் போது, இந்திய வீரர்கள் இஷாந்த் சர்மாவும் ஜடேஜாவும் களத்தில் கடுமையாக மோதிக்கொண்டுள்ளனர். ஜடேஜா 12 பேர் கொண்ட அணியில் இருந்தாலும் ஆடும் லெவனில் இல்லை. எனினும் அவர் வேறு யாருக்காகவோ களத்தில் ஃபீல்டிங் செய்துகொண்டிருந்த போது, அவருக்கும் இஷாந்த் சர்மாவுக்கும் இடையே முட்டியுள்ளது. இருவரும் காரசாரமாக ஆக்ரோஷமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால் அவர்கள் எந்த விஷயத்திற்காக முட்டிக்கொண்டனர் என்பது உறுதியாக தெரியவில்லை. ஆனால் இருவரும் அடித்துக்கொள்ளாத குறையாக சண்டையிட்டனர். பின்னர் ஷமி தலையிட்டு இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார். 

ஜடேஜாவும் இஷாந்த் சர்மாவும் சண்டையிட்ட விவகாரம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. இருவரும் சண்டையிட்டதற்கான காரணம் விரைவில் வெளிவர வாய்ப்புள்ளது.