தோனியை போலவே இஷான் கிஷானும் ரன் அவுட் செய்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. 

இந்திய அணியின் சீனியர் வீரரும் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனுமான தோனி, சர்வதேச கிரிக்கெட்டின் மிகச்சிறந்த விக்கெட் கீப்பர்களில் ஒருவர். விக்கெட் கீப்பிங்கில் பல சாதனைகளுக்கு சொந்தக்காரர். 

அதிவேக ஸ்டம்பிங், அதிவேக ரன் அவுட், அசாத்திய கேட்ச்கள் என விக்கெட் கீப்பிங்கில் மிரட்டுபவர். அவரது அனுபவத்தை இளம் விக்கெட் கீப்பர்களுக்கு கற்றுக்கொடுக்க தோனி தவறுவதே இல்லை. இந்திய அணியில் இருக்கும் இளம் விக்கெட் கீப்பர்களான ரிஷப் பண்ட், இஷான் கிஷான் ஆகியோருக்கு அவ்வப்போது பலனுள்ள பல ஆலோசனைகளை வழங்கி வருகிறார். 

இந்திய வீரர்கள் மட்டுமின்றி எதிரணி வீரர்களுக்கும் பல டிப்ஸ்களை கொடுப்பார் தோனி. தோனி கொடுத்த டிப்ஸ்கள் மிகவும் பயனுள்ளதாக இருப்பதாகவும், தங்களது திறமைகளை வளர்த்துக்கொள்ள உதவுவதாகவும் இளம் வீரர்கள் தெரிவித்துவருகின்றனர். 

ஐபிஎல் போட்டிகளுக்கு இடையே இளம் விக்கெட் கீப்பர் இஷான் கிஷானுக்கு தோனி ஆலோசனைகள் வழங்கிய புகைப்படம் அந்த சமயத்தில் வைரலானது. இளம் வீரர் இஷான் கிஷான், 19 வயதுக்கு உட்பட்ட இந்திய அணியின் கேப்டனாக இருந்து 2016 ஜூனியர் உலக கோப்பையில் இறுதி போட்டிவரை இந்திய அணியை அழைத்து சென்றவர். 

கடந்த ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடினார். அப்போது போட்டி முடிந்ததும் அவருக்கு தோனி பல விக்கெட் கீப்பிங் ஆலோசனைகளை வழங்கினார். இஷான் கிஷானும் தோனியின் சொந்த மாநிலமான ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் தான். 

இப்படி தோனியின் ஆலோசனைகளை பெற்ற இஷான் கிஷான், தோனியை போன்றே ஒரு ரன் அவுட் செய்துள்ளார். அது அவுட் இல்லை என்றபோதிலும், அவர் ரன் அவுட் செய்தவிதம், தோனியை போன்றே உள்ளது. பந்தை பிடித்து நிதானமாக அடிக்க போதிய நேரம் இல்லாத நிலையில்,  பந்தை பிடித்து வித்தியாசமான கோணங்களில் வித்தியாசமான முறைகளில் ஸ்டம்பில் அடிப்பார். 

தோனி ஏற்கனவே ஒருமுறை ரன் அவுட் செய்ததுபோலவே இஷான் கிஷானும் செய்துள்ளார். துலீப் டிராபி இறுதி போட்டியில் இந்தியா புளூ மற்றும் இந்தியா ரெட் அணிகள் மோதின. இந்த போட்டியில் தோனியை போலவே இஷான் கிஷான் செயல்பட்டுள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

ஐபிஎல் தொடரில் தோனியை போலவே இஷான் கிஷானும் ஹெலிகாப்டர் ஷாட் அடித்தது குறிப்பிடத்தக்கது.