ipl reached interesting period of this season
நடந்துவரும் ஐபிஎல் 11வது சீசன் மிகவும் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. மும்பை, ராஜஸ்தான் ஆகிய அணிகள் தொடர் தோல்விகளிலிருந்து மீண்டு பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்து கொண்டு வருகின்றன.
இந்த ஐபிஎல் சீசனில் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறும் வாய்ப்பை டெல்லி மற்றும் பெங்களூரு அணிகள் இழந்துவிட்டன.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:
இந்த ஐபிஎல் தொடங்கியதிலிருந்தே ஹைதராபாத் அணி ஆதிக்கம் செலுத்திவருகிறது. சிறந்த பவுலிங் அணியாக அறியப்பட்ட ஹைதராபாத் அணி, டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சிறந்த பேட்டிங்கையும் வெளிப்படுத்தியதால் எதிரணிகள் கலக்கத்தில் உள்ளன.

18 புள்ளிகளுடன் பிளே ஆஃப் சுற்றுக்குள் ஹைதராபாத் அணி நுழைந்துவிட்டது.
சென்னை சூப்பர் கிங்ஸ்:
புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் சென்னை அணி, 14 புள்ளிகளைப் பெற்றுள்ளது. ஏற்ற இறக்கங்கள், வெற்றி தோல்விகளை கடந்த கலவையாகத்தான் உள்ளது சென்னை அணியின் நிலவரம்.

ஆனாலும் 14 புள்ளிகளை பெற்றிருப்பதால், எஞ்சியிருக்கும் 3 போட்டிகளில் ஒன்றில் வென்றால் கூட சென்னை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும்.
கிங்ஸ் லெவன் பஞ்சாப்:
இந்த சீசனை வெற்றிகரமாக தொடங்கிய பஞ்சாப் அணி, அவ்வப்போது சில தோல்விகளையும் சந்தித்தது. அஸ்வின் தலைமையில் பஞ்சாப் அணி சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது. 10 போட்டிகளில் 6ல் வெற்றி பெற்றுள்ள பஞ்சாப் அணி, 12 புள்ளிகளுடன் 3ம் இடத்தில் உள்ளது.

எஞ்சிய 4 போட்டிகளில் இரண்டில் வென்றாலே போதும். ஆனால் பஞ்சாப் அணி இனிவரும் போட்டிகளில் எதிர்கொள்ள இருப்பது, முக்கியமான அணிகள். மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு ஆகிய நான்கு அணிகளுடன் எஞ்சிய 4 போட்டிகளை ஆடுகிறது பஞ்சாப் அணி.
ஹைதராபாத் அணி தகுதி பெற்றுவிட்டது. சென்னையும் பஞ்சாப்பும் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிடக்கூடிய நிலையில்தான் உள்ளன.
மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:
நான்காவது அணியாக எந்த அணி வரப்போகிறது என்பதுதான் பெரிய எதிர்பார்ப்பு. தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்துவந்த மும்பை, ஒரு கட்டத்தில் எஞ்சிய 6 போட்டிகளிலும் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் மூன்று போட்டிகளில் தொடர்ச்சியாக வென்றுள்ளது. எஞ்சிய மூன்று போட்டிகளிலும் அந்த அணி வெல்ல வேண்டும்.
அதேபோல், ராஜஸ்தான் அணியும் கடைசி இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்துள்ளது. மும்பை மற்றும் ராஜஸ்தான் ஆகிய இரண்டு அணிகளுமே எஞ்சிய மூன்று போட்டிகளிலும் வெல்ல வேண்டும் என்ற நிலையில், நாளைய போட்டியில் இரு அணிகளும் மோதுகின்றன. நாளைய போட்டியில் தோற்கும் அணி, பிளே ஆஃப் சுற்றுக்கு செல்வதற்கு, மற்ற அணிகளின் வெற்றி தோல்வியை சார்ந்திருக்க வேண்டிய நிலை உருவாகும்.
கொல்கத்தா அணியும் எஞ்சிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றே தீர வேண்டும். கொல்கத்தா அணி, எஞ்சிய மூன்று போட்டிகளில் பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத் ஆகிய அணிகளுடன் மோதுகிறது.
வெற்றி கட்டாயத்தில் உள்ள மும்பையும் ராஜஸ்தானும் நாளை மோதுகின்றன. அதன்பிறகு அதேபோன்ற வெற்றி கட்டாயத்தில் உள்ள கொல்கத்தாவும் ராஜஸ்தானும் 15ம் தேதி மோதுகின்றன. இதற்கிடையே கொல்கத்தா இன்று பஞ்சாப்பை எதிர்கொள்கிறது. இந்த மூன்று அணிகளில் அதிகமான ரன்ரேட்டை பெற்றிருப்பது மும்பை அணிக்கு கூடுதல் பலம். ஒருவேளை மூன்று அணிகளும் ஒரே புள்ளிகளை பெற்றால், ரன்ரேட் அடிப்படையில் உள்ளே நுழைவதற்கான வாய்ப்பு மும்பை அணிக்கு அதிகம் உள்ளது.
4ம் இடத்திற்கு கடும் போட்டியில் உள்ள மூன்று அணிகளும் ஒரே புள்ளிகளோடு ஒரே மாதிரியான நிலையில் உள்ளதால், இனிவரும் போட்டிகள் ஒவ்வொன்றும் முக்கியமானது; மேலும் விறுவிறுப்பாகவும் அமையும்.
