நாடு முழுவதும் அனைவராலும் எதிர்பார்க்கப்படும் 11-வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா நாளை மும்பை வாங்கடே மைதானத்தில் தொடங்குகிறது.  காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காததால் இந்தப் போட்டி களை கட்டுமா? அல்லது நடையை கட்டுமா? 

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) சார்பில் டி-20 ஓவர் கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் பல்வேறு நகரங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தியன் பிரிமீயர் லீக் (ஐபிஎல்) போட்டிகள் கடந்த 2007-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 

மொத்தம் 8 அணிகள் இருமுறை மோத வேண்டும், ரௌண்ட்ராபின் முறையில் நடைபெறும் போட்டிகளில் முதல் 4 இடங்களைப் பெறும் அணிகள் புள்ளிகள் அடிப்படையில் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவர். 

லீக் போட்டியில் முதல் இரண்டு இடங்களை பெறும் அணிகள் முதல் தகுதிப் போட்டியில் மோதும். இதில் தோல்வி அடையும் அணிக்கு இரண்டாவது வாய்ப்பாக மற்றொரு தகுதிப் போட்டியில் மோதலாம்.

மூன்று  மற்றும் 4-வது இடங்களைப் பெறும் அணிகள் எலிமினேட்டர் எனப்படும் போட்டியில் மோதும். இதில் வெல்லும் அணி முதல் தகுதிச்சுற்று போட்டியில் தோல்வியுற்ற அணியுடன் மோதும். இரண்டாம் தகுதிப் போட்டியில் வெல்லும் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.

அணி வீரர்கள் அனைவரும் ஏல முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒப்பந்தம் செய்யப்படுகின்ற நிலையில் 11-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நாளை தொடங்கி 51 நாள்கள் நடக்கிறது. 

மொத்தம் 60 போட்டிகளில் மும்பை இண்டியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ், தில்லி டேர் டெவில்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்க்ஸ் லெவன் பஞ்சாப், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு உள்ளிட்ட அணிகள் மோதுகின்றன.

நாளை தொடக்க ஆட்டத்தில் நடப்புச் சாம்பியன் மும்பை இண்டியன்ஸ் அணியும், முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.