இந்திய வீரர்களுடன் நட்பு பாராட்டாமல் இருந்தால் ஐபிஎல் தொடரில் எங்கே அதிக தொகைக்கு போணியாகாமல் இருந்து விடுவோமா என்ற அச்சத்தால் தான் ஆஸ்திரேலிய வீரர்கள் அமைதி முறையை கடைபிடித்து வருவதாக இந்திய அணியின் முன்னாள் அதிரடி கிரிக்கெட் வீரர் விரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார். 

ஆஸ்திரேலியாவுடன் விளையாடிய ஒரு நாள் போட்டியிலும் டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணியே தொடரை வென்றது. ஆனால் ஒவ்வொரு முறையும் ஆஸ்திரேலியா அணி ஏதாவது ஒரு விமர்சனத்தை முன் வைக்கும். 

தற்போது எந்த ஒரு விமர்சனத்தையும் முன்வைக்காமல் அமைதி காத்து வருகிறது ஆஸ்திரேலியா அணி. இதற்கான காரணம் குறித்து பல்வேறு கிரிக்கெட் ரசிகர்களும் மிகவும் குழப்பத்தில் இருந்து வந்தனர். 

இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் இந்த அமைதி முறை ஆட்டம் குறித்த ரகசியத்தை சமீபத்தில் இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் விரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார். 

எந்த விவகாரத்திலும் எதற்கும் அஞ்சாமல் மனதில் பட்டதை வெளிப்படுத்துவதில், தனது பேட்டிங்கைப் போன்றே வீரேந்திர சேவாக்கின் விமர்சனங்களும் அதிரடியாக அமையும் என்பது அனைவரும் அறிந்ததே.

அதன்படி தற்போதும்  அதிரடியாக வாயை விட்டுள்ளார் வீரேந்திர சேவாக். அதாவது, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரை நினைத்து ஆஸ்திரேலிய வீரர்கள் இப்போதே கலக்கத்தில் உள்ளதாகவும், இந்திய வீரர்களுடன் நட்பு பாராட்டாமல் இருந்தால் எங்கே அதிக தொகைக்கு போணியாகாமல் இருந்து விடுவோமா என்ற அச்சம் தான் எனவும் தெரிவித்துள்ளார். 

இந்திய வீரர்களை பகைத்துக் கொண்டால் ஐபிஎல் போட்டிகளில் அவர்களுடன் இணைந்து விளையாடுவது கடினமாக இருக்கும் என்பது தான் அவர்களது கனிப்பாக இருக்கும் எனவும், ஆஸ்திரேலியாவில் அடுத்த தலைமுறை அணிக்கு போதிய அனுபவம் இல்லை. இதுவே அவர்களின் இந்த சரிவுக்கு காரணமாக இருக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.