ஒவ்வொரு வீரர், வீராங்கனைகளும் விடா முயற்சியுடன் விளையாடுவதால் இனி சர்வதேச அளவிலான பாட்மிண்டன் போட்டிகள் எளிதாக இருக்காது என்று இந்திய பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து கூறினார்.

உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஸ்காட்லாந்தில் நடைபெற்றதும் இதில் இறுதிச்சுற்று வரை முன்னேறிய சிந்து, அதில் வெள்ளி வென்றார்.

இந்நிலையில், நாடு திரும்பிய அவர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியது:

“சர்வதேச அளவிலான போட்டிகள் இனி எளிதானவையாக இருக்கப்போவதில்லை. ஏனெனில், ஆடவர், மகளிர், ஒற்றையர், இரட்டையர் என அனைத்து போட்டிகளிலுமே ரேலிக்களின் நீளம் அதிகரித்துள்ளது. ஒவ்வொரு வீரர், வீராங்கனைகளும் விடா முயற்சியுடன் விளையாடுவதே இதன் காரணம். எந்தவொரு வீரர்/வீராங்கனையும் புள்ளிகளை எளிதாகப் பெற்றுவிடுவதில்லை.

நஜோமியுடனான இறுதிச்சுற்றில் ஒரு ரேலி 73 ஷாட்களுக்கு நீடித்தது. முதல் முறையாக இதுபோன்று நிகழ்கிறது என்று எண்ணுகிறேன். அதில் இருவருமே உடல் மற்றும் மனச்சோர்வு அடைந்தோம். இருப்பினும், அது உலக சாம்பியன்ஷிப் இறுதிச்சுற்று என்பதால் ஒவ்வொரு புள்ளிகளும் முக்கியம்.

அது நல்லதொரு ஆட்டம். நஜோமி சிறப்பாக ஆடினார். மூன்றாவது செட்டில் இருவருமே 20-20 என்ற புள்ளிகள் கணக்கில் இருந்தோம். ஆட்டம் எவருக்கும் சாதகமாக மாறும் வாய்ப்பு இருந்ததால் கடைசி வரையில் பரபரப்பு நீடித்தது. ஆனால், இறுதியில் ஆட்டம் எனது கையை விட்டுச் சென்றது.

சற்று வருத்தம் இருந்தாலும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். ஏனெனில், முன்பு உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கங்கள் வென்றிருந்த நிலையில், தற்போது வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளேன்.

இறுதிச்சுற்றில் நானும், சாய்னா மோதும் வாய்ப்பு இருக்கும் என அனைவரும் எதிர் நோக்கினோம். இப்போது அது நிகழவில்லை என்றாலும், அடுத்து வரும் நாள்களில் அது சாத்தியமாகலாம்” என்று சிந்து தெரிவித்தார்.