மாணவர்கள் கல்வியில் ஆர்வம் காட்டுவதைப் போல், விளையாட்டு போன்ற தனித் திறன்களை வளர்த்துக் கொள்வதிலும் ஆர்வம் காட்ட வேண்டும் என்று தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரான ஜான்டி ரோட்ஸ் தெரிவித்தார்.

சென்னை ஆலப்பாக்கம் வேலம்மாள் வித்யாலயா பள்ளியின் சார்பில் விளையாட்டுத் துறையில் சாதித்த மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரான ஜான்டி ரோட்ஸ் பங்கேற்றார்.

அப்போது அவர் பேசியது:

“பள்ளிகளில் மாணவர்கள் கல்வி கற்பதில் ஆர்வம் காட்டுவதைப் போல், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு தனித் திறன்களை வளர்த்துக் கொள்வதிலும் ஆர்வம் காட்ட வேண்டும்.

அதற்கு பள்ளிகளில் சிறு வயதிலேயே மாணவர்கள் விரும்பும் விளையாட்டுகளில் தொடர் பயிற்சி அளிப்பது அவசியமாகும்.

தென் ஆப்பிரிக்காவில் ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர்களுக்கு பல்வேறு விளையாட்டுகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

அதேபோல், இங்குள்ள பள்ளிகளிலும் மாணவர்களுக்கு விளையாட்டு பயிற்சி அளிக்க முன்வர வேண்டும்.

இதுபோன்று செய்வதன் மூலம் ஒவ்வொருவருக்கும் தன்னம்பிக்கை ஏற்படும். தலைசிறந்த வீரர்களையும் உருவாக்க முடியும்.

50 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஒரு வீரர் 90 ஓட்டங்களைத் தொடர்ந்து, 100 ஓட்டங்களை எடுக்க முயற்சிக்கும்போது இயல்பாகவே பதற்றம் தொற்றிக் கொள்ளும். ஆனால், டி20 கிரிக்கெட் போட்டியில் 95 ஓட்டங்கள் வரையிலும் எவ்வித பதற்றமும் இல்லாமல் ஆட முடியும்.

டி20 போட்டியில்தான் ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும் தங்களது தனித் திறமைகளை வெளிப்படுத்த முடியும்” என்று அவர் கூறினார்.

அதனைத் தொடர்ந்து பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை அவர் வழங்கினார். பின்னர் ஜான்டி ரோட்ஸ்-க்கு நினைவுப் பரிசாக வெள்ளி வீரவாள் வழங்கப்பட்டது.