India World Cup football Intensify preparations
இந்தியாவில் நடக்க இருக்கும் உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக டெல்லி நகரில் ஆய்வு நடத்தப்பட்டது.
அண்டர் 17 என்று சொல்லப்படும் 17 வயதுக்கு உள்பட்டோரான உலகக் கோப்பை கால்பந்துப் போட்டி வரும் அக்டோபர் 6 முதல் 28-ஆம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற இருக்கிறது.
இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில், ஃபிஃபா நிகழ்ச்சிகளுக்கான தலைவர் ஜெய்மி யார்ஸா தலைமையிலான குழு, உலகக் கோப்பை போட்டிக்கான ஏற்பாடுகள் குறித்த ஆய்வை மேற்கொள்ளத் தொடங்கின.
முக்கியமான 6 நகரங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ள நிலையில், தலைநகர் டெல்லியில் நேற்று ஆய்வு நடத்தப்பட்டது குறித்து ஜெய்மி யார்ஸா கூறியது:
“உலகக் கோப்பை போட்டிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவது திருப்தி அளிக்கும் வகையில் உள்ளது. டெல்லி உலகின் மிக முக்கிய நகரம் என்பதால், இங்குள்ள ஜவாஹர்லால் நேரு அரங்கம் தலைநகரை பிரதிபலிக்கும் வகையில் சிறப்பானதாக இருக்க வேண்டும். அதாவது, உச்சபட்ச ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.
போட்டி நடைபெறும் இடங்கள் மற்றும் பயிற்சிக்குரிய இடங்களில் மேற்கொள்ளப்படும் பணிகள் துரிதப்படுத்தப்பட வேண்டும். ஏனெனில், அது வீரர்களுக்கான முக்கியமான இடங்களாகும்.
போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தகுந்த முறையில் திட்டமிட்டு, அதை சரியான வகையில் செயல்படுத்தி வருகின்றனர். போட்டி ஏற்பாடுகளுக்கான உதவிகளை வழங்குவதில் இந்திய அரசு மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் விஜய் கோயலின் நடவடிக்கைகள் திருப்தி அளிக்கும் வகையில் உள்ளன.
இறுதிப் போட்டிக்கான மைதானம் பெரியதாக இருக்க வேண்டும். எனினும், அது மட்டுமல்லாமல் பல்வேறு காரணிகளும் அதில் பரிசீலிக்கப்படும். போட்டிக்கான அட்டவணை தயாராகும்போது, அனைத்து அணிகளும் இந்தியாவுக்கு வரும். அப்போது போட்டிக்குரிய இடங்கள் தயார் நிலையில் இருக்க விரும்புகிறோம்” என்று யாஸ்ரா கூறினார்.
டெல்லியைத் தொடர்ந்து கோவா, கொச்சி, நவி மும்பை, குவாஹாட்டி, கொல்கத்தா ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொள்ள இருக்கின்றது இந்தக்குழு.
