Asianet News TamilAsianet News Tamil

உலக மகளிர் இளையோர் குத்துச் சண்டை: இந்திய வீராங்கனைகளின் அசத்தல் ஆட்டத்தால் இந்தியாவுக்கு ஐந்து பதக்கம் உறுதி...

Indian Womens Younger Boxing Five Indian Badminton For India Wrestling
Indian Womens Younger Boxing Five Indian Badminton For India Wrestling
Author
First Published Nov 23, 2017, 10:08 AM IST


ஐந்தாவது உலக மகளிர் இளையோர் குத்துச் சண்டை போட்டியில், இந்திய குத்துச்சண்டை வீராங்கனைகள் அன்குஷிதா போரோ, சசி சோப்ரா, ஜோதி குலியா, நேஹா யாதவ் மற்றும் அனுபமா ஆகிய ஐந்து பேருக்குஅரையிறுதிக்கு முன்னேறியதால் பதக்கம் உறுதி செய்யப்பட்டது.

ஐந்தாவது உலக மகளிர் இளையோர் குத்துச் சண்டை போட்டியில் அஸ்ஸாம் மாநிலம், குவாஹாட்டி நகரில் நடைபெற்று வருகிறது.

இதில், நேற்று நடைபெற்ற காலிறுதிச் சுற்றில், 64 கிலோ எடைப்பிரிவில் இத்தாலியின் ரெபெக்கா நிக்கோலியை, சர்வதேச குத்துச்சண்டை போட்டிகளில் இரண்டு முறை வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை அன்குஷிதா போரோ எதிர்கொண்டார்.

தொடக்கம் முதலே அட்டகாசமாக போட்டியிட்ட போரோவுக்கு, ரெபெக்கா கடுமையான சவால் கொடுத்தார். இருப்பினும் முடிவில் போரோ வெற்றிப் பெற்றார்.

இதேபோல், 57 கிலோ எடைப்பிரிவில் போட்டித் தரவரிசையில் பத்தாவது இடத்தில் உள்ள கஜகஸ்தானின் சாந்துகாஷ் அபிகானை, சர்வதேச குத்துச் சண்டை போட்டியில் தங்கம் வென்ற சசி சோப்ரா 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு பிரிவான 51 கிலோ எடைப்பிரிவில் நடைபெற்ற மற்றொரு காலிறுதியில், இத்தாலி வீராங்கனை கியோவன்னா மர்சீஸை அரியாணாவைச் சேர்ந்த ஜோதி குலியா வீழ்த்தினார்.

இந்தப் போட்டியில் நேஹா யாதவ் (+81 கிலோ எடைப் பிரிவு), அனுபமா (81 கிலோ) ஆகிய இருவரும், அந்தப் பிரிவில் அதிக போட்டியாளர்கள் பங்கேற்காத காரணத்தால் ஏற்கெனவே நேரடியாக அரையிறுதிக்கு முன்னேறினர்.

அரையிறுதியில் பங்கேற்பவர்களுக்கு வெண்கலம் உறுதி என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி, அன்குஷிதா போரோ, சசி சோப்ரா, ஜோதி குலியா ஆகியோரும் அரையிறுதிக்கு முன்னேறியதால் இந்தியாவுக்கு ஐந்து பதக்கங்கள் உறுதியாகியுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios