Asian Games 2023 Table Tennis: பெண்களுக்கான டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியா வெற்றி!
நேபாள் அணிக்கு எதிராக நடந்த முதல் நிலை சுற்றில் இந்தியா வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
சீனாவில் ஹாங்சோவ் நகரில் இன்று 23 ஆம் தேதி முதல் ஆசிய விளையாடு போட்டிகள் தொடங்குகிறது. இந்த ஆசிய விளையாட்டு போட்டிகள் வரும் அக்டோபர் 8 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. ஆனால், அதற்கு முன்னதாகவே, கால்பந்து, கிரிக்கெட், வாலிபால், பீச் வாலிபால் உள்ளிட்ட சில போட்டிகள் இன்று தொடங்கியது. நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் இந்தப் போட்டியானது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியால் அங்கீகரிக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டிகளுக்கு அடுத்தபடியான மிகப்பெரிய விளையாட்டு போட்டியாக பார்க்கப்படுகிறது.
இதுவரையில், இந்தியா ஆசிய விளையாட்டு போட்டிகளில் 672 பதக்கங்களை வென்று 5 ஆவது இடத்தில் உள்ளது. இன்று மாலை தொடக்க விழா நடக்க உள்ள நிலையில், காலை 7.30 மணிக்கு பெண்களுக்கான டேபிள் டென்னிஸ் போட்டி நடந்தது. இதில், இந்தியா மற்றும் நேபாள் அணிகள் மோதின. 5 நிலைகளைக் கொண்ட முதல் நிலை சுற்றில் இந்தியா 11-1, 11-6, 11-8 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
அடுத்து நடந்த 2ஆவது நிலை சுற்றில் 11-3, 11-7, 11-2 என்று இந்தியா கைப்பற்றியது. இதே போன்று 3ஆவது நிலை சுற்றையும், 11-1, 11-5, 11-2 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இதன் மூலமாக ஆசிய விளையாட்டு போட்டியில் பெண்களுக்கான டேபிள் டென்னிஸ் போட்டியின் முதல் நிலை சுற்றில் இந்தியா வெற்றி பெற்று 2ஆவது சுற்றுக்கு முன்னேறியுள்ளது.