மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான அரையிறுதி இங்கிலாந்தின் டெர்பி நகரில் இன்று நடைபெறுகிறது.

இதுவரை ஆஸ்திரேலியாவுடன் 42 ஆட்டங்களில் விளையாடியுள்ள இந்திய அணி, அதில் 34-ல் தோற்றுள்ளது. ஆனாலும், மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி, அரையிறுதியில் மிகுந்த நம்பிக்கையோடு ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.

2005-ல் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய இந்திய அணி இந்த ஆட்டத்தில் வெல்லுமானால், மகளிர் உலகக் கோப்பை போட்டியில் இரண்டாவது முறையாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய பெருமையைப் பெறும்.

இந்த உலகக் கோப்பையைப் பொறுத்தவரையில் டெர்பி மைதானத்தில் ஆஸ்திரேலியா இதுவரை ஓர் ஆட்டத்தில்கூட விளையாடவில்லை. ஆனால் இந்திய அணி தனது குரூப் சுற்றில் 4 ஆட்டங்களை டெர்பி மைதானத்தில்தான் விளையாடியுள்ளதால் அது இந்திய அணிக்கு சாதகமானதாக அமையலாம்.

ஆஸ்திரேலியாவை வீழ்த்துவது அவ்வளவு எளிதல்ல. குரூப் சுற்றில் 7 ஆட்டங்களில் விளையாடிய ஆஸ்திரேலியா, அதில் 6-இல் வெற்றி கண்டு வலுவான அணியாக உள்ளது.

இந்திய அணிபூனம் ரெளத், ஸ்மிருதி மந்தனா, கேப்டன் மிதாலி ராஜ், மன்பிரீத் கெளர், தீப்தி சர்மா, வேதா கிருஷ்ணமூர்த்தி என வலுவான பேட்டிங் வரிசையைக் கொண்டுள்ளது.  மிடில் ஆர்டரைப் பொறுத்தவரையில் கேப்டன் மிதாலி ராஜ் மிகப்பெரிய பலமாகத் திகழ்கிறார்.

வேகப்பந்து வீச்சில் ஜூலான் கோஸ்வாமி, ஷிகா பாண்டே கூட்டணியையும், சுழற்பந்து வீச்சில் ராஜேஷ்வரி கெய்க்வாட், தீப்தி சர்மா உள்ளிட்டோரையும் நம்பியுள்ளது இந்தியா. நியூஸிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய ராஜேஷ்வரி மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஆஸ்திரேலிய அணி பேட்டிங், பெளலிங் என இரண்டிலும் வலுவாக இருந்தாலும், இந்த ஆட்டத்தில் இந்திய வீராங்கனைகளும் கடுமையாகப் போராடுவார்கள் என்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும்.