காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் இந்திய மகளிர் ஹாக்கி அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு கேப்டனாக ராணி ராம்பால் நியமிக்கப்பட்டுள்ளார்.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் 'ஏ' பிரிவில் இந்திய அணியுடன், மலேசியா, வேல்ஸ், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகள் இடம்பிடித்துள்ளன.

ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் ஏப்ரல் 4-ஆம் தேதி தொடங்கும் காமன்வெல்த் போட்டியில், இந்திய மகளிர் அணி ஏப்ரல் 5-ஆம் தேதி முதல் ஆட்டத்தில் வேல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

கொரிய ஹாக்கி தொடருக்கான அணியில் ஓய்வளிக்கப்பட்டிருந்த சவிதா, அணிக்கு திரும்பியுள்ளது சாதகம். கோல்கீப்பர் சவிதா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 

அணியின் தடுப்பாட்டமும் தீபிகா, சுனிதா லக்ரா உள்ளிட்ட அனுபவம் வாய்ந்த வீராங்கனைகளோடு பலத்துடன் காணப்படுகிறது. கேப்டன் ராணி, லால்ரெம்சியாமி, வந்தனா கட்டாரியா ஆகியோரால் இந்தியாவின் தாக்குதல் ஆட்டம் சிறப்பாக இருக்கும்.

சர்வதேச தரவரிசையில் 10-வது இடத்தில் இருக்கும் இந்திய அணி, உலகின் 2-ஆம் நிலையில் இருக்கும் இங்கிலாந்து, 4-ஆம் நிலையில் இருக்கும் நியூஸிலாந்து, 5-ஆம் இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியா அணிகளிடம் இருந்து கடுமையான போட்டியைச் சந்திக்கும்.

இந்திய மகளிர் அணி கடந்த 2002-ல் இங்கிலாந்தில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில், இங்கிலாந்தை வீழ்த்தி தங்கம் வென்றது. பின்னர் 2006-இல் வெள்ளி வென்ற இந்தியா, 2010 மற்றும் 2014-ஆம் ஆண்டுகளில் 5-ஆம் இடமே பிடித்தது. 

அறிவிக்கப்பட்டுள்ள இந்திய ஹாக்கி மகளிரணி  விவரம்

கோல்கீப்பர்கள்: 

சவிதா, ரஜனி எடிமர்பு  

தடுப்பாட்டக்காரர்கள்:

தீபிகா, சுனிதா லக்ரா,  தீப் கிரேஸ் எக்கா,  குர்ஜித் கெளர்,  சுஷிலா சானு 

நடுகள வீராங்கனைகள்:

மோனிகா, நமிதா டோப்போ, நிக்கி பிரதான், நேஹா கோயல்,  லிலிமா மின்ஸ். 

முன்கள வீராங்கனைகள்:

ராணி ராம்பால், வந்தனா கட்டாரியா, லால்ரெம்சியாமி, நவ்ஜோத் கெளர்,  நவ்னீத் கெளர், பூனம் ராணி.